×

ரூ.7 லட்சம் நஷ்டஈடு கேட்டு ஜோதிடர் கடத்தல்: மர்ம கும்பலுக்கு வலை

அம்பத்தூர் : அம்பத்தூர், பானு நகர், 22வது தெருவை சேர்ந்தவர் கோபிநாத் (58). அம்பத்தூர் பஸ் நிலையம் அருகில் ஜோதிட நிலையம் நடத்தி வருகிறார். இவர், கடந்த 16ம் தேதி தனது ஜோதிட நிலையத்தில் இருந்தபோது, பைக்கில் அங்கு வந்த 2 பேர், ‘‘போரூரில் உள்ள ஒரு வீட்டில் பூஜை நடத்த வேண்டும்,’’ என அழைத்துள்ளனர்.

இதையடுத்து, கோபிநாத் அவர்களுடன் பைக்கில் சென்றார். பின்னர், அவர்கள் போரூரில் உள்ள ஒரு வீட்டில் கோபிநாத்தை அடைத்து வைத்துள்ளனர். அப்போது, அங்கு வந்த 3 பேர், தங்களை போலீசார் என கூறியதுடன், ‘‘நீங்கள் ஏற்கனவே பூஜை செய்த இடத்தில் ஒருவர் இறந்துவிட்டார். அவரது குடும்பத்தினர் ரூ.7 லட்சம் நஷ்டஈடாக கேட்கின்றனர். அதை கொடுத்துவிட்டால், உங்களை விட்டுவிடுகிறோம்,’’ எனக்கூறி உள்ளனர்.

மேலும், அவரின் வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டு அம்பத்தூர், பானு நகருக்கு இருவர் வந்து, கோபிநாத்தின் மனைவி சோபனாவிடம், ‘‘நாங்கள் இருவரும் போலீசார், உங்கள் கணவர் பூஜை செய்யும்போது ஒருவர் பலியாகி விட்டார். எனவே அந்த குடும்பத்துக்கு நீங்கள் ரூ.7 லட்சம் நஷ்ட ஈடுடாக வழங்க வேண்டும்.

இதனை, நீங்கள் உடனடியாக ஏற்பாடு செய்யுங்கள், நாங்கள் நாளை உங்களை தொடர்புகொள்கிறோம்,’’ என கூறிவிட்டு சென்றனர்.
வீட்டிற்கு வந்தவர்கள் போலீசார் என கூறியதால், சோபனா இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் செய்யவில்லை. பின்னர் நேற்று முன்தினம் மீண்டும் அவர்கள் இருவரும் கோபிநாத்தின் செல்போனில் இருந்து சோபனாவை தொடர்புகொண்டு, ‘‘பணத்தை தயார் செய்து விட்டீர்களா, நாங்கள் எப்போது வரவேண்டும்,’’ என கேட்டுள்ளனர்.

அப்போது சோபனா, ‘‘நீங்கள் எந்த காவல் நிலைய போலீசார், எனது கணவரை வீடியோ காட்டுங்கள்,’’ என கேட்டபோது, அவர்கள் மழுப்பலாக பேசி, சிறிது நேரத்தில் மீண்டும் தொர்புகொள்கிறோம்,’’ என போனை துண்டித்து விட்டனர்.  

இதனால் சந்தேகமடைந்த சோபனா, அம்பத்தூர் காவல் நிலையத்தில் இதுபற்றி புகார்  செய்தார். போலீசார் வழக்கு பதிந்து, கோபிநாத்தின் செல்போன் டவரை ஆய்வு செய்தபோது, போரூர் பகுதியை காட்டியது. தனிப்படை போலீசார் மேற்கண்ட பகுதி முழுக்க தேடியும், கோபிநாத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் போலீசார் தங்களை நெருங்குவதை அறிந்த கடத்தல் கும்பல், நேற்று முன்தினம் இரவு கோபிநாத்தை பைக்கில் கொண்டு வந்து வானகரம் அருகே சாலை ஓரம் விட்டு சென்றுள்ளனர். கோபிநாத் அங்கிருந்து ஆட்டோ மூலம் அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு வந்தார். தீவிர விசாரணைக்கு பிறகு, போலீசார் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். கடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.

Tags : Astrologer kidnapping ,Astrologer , Astrologer kidnapped
× RELATED சிறுகமணிவேளாண்மை அறிவியல் நிலையத்தில் வீட்டு தோட்டம் அமைக்க பயிற்சி