×

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இல்லை .. தனிவார்டை விட்டு வெளியேறி கொரோனா நோயாளிகள் போராட்டம்..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சைகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லை என கொரோனா நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒருவார காலமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட வில்லை என புகார் எழுந்துள்ளது. மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு முறையான குடிநீர், மருத்துவ உபகரணங்கள் மற்றும் முகக்கவசங்கள் ஆகியவற்றை தரவில்லை என ஒருவார காலமாக புகார் அளித்து வந்தனர். மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என அனைவரும் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் இன்று மாலை கொரோனா நோயாளிகள் மருத்துவமனை தனிவார்டை விட்டு வெளியே வந்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி மற்றும் மருத்துவமனை சுற்று வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மருத்துவமனை வளாகத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகளை சமாதானப்படுத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பின்னரும் நோயாளிகள் தனிவார்டுக்கு செல்லாமல் தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது சிகிச்சையின் மூலம் குணப்படுத்தக் கூடியதுதான் என்றாலும், ஒரே நேரத்தில் பெருமளவுக்கு நோய்த்தொற்று ஏற்பட்டால், மருத்துவமனைகளில், நோயாளிகளுக்கு இட வசதி கிடைக்காது என்பதுதான் உலக அளவில் அனைத்து நாடுகளும் சந்தித்துவரும் பிரச்சனையாகும். ஊரடங்கு உத்தரவால் கொரோனா வைரஸ் தொற்று பரவும் வேகம் குறைக்கப்பட்டு வந்தது. மேலும் ஊரடங்கு தளர்வு பின்னர் தான் தொற்று பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. ஏற்கனவே தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லை, பராமரிப்பு இல்லை என வதந்தி பரவி வந்தது. இதனையடுத்து இதை உண்மையாக்கும் விதமாக தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் பரமக்குடியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று நோயாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : facilities ,Ramanathapuram Government Hospital ,Hospital ,coronation patients ,Ramanathapuram , Ramanathapuram, government hospital, basic facilities, no, corona patients, struggle
× RELATED தேர்தல் பிரச்சாரத்தின்போது திடீர்...