×

தற்போதைய நிலைமைக்கு யார் பொறுப்பு?; ராணுவ வீரர்களை எந்த ஆயுதமும் இன்றி அனுப்பியது யார்?...காங். எம்.பி. ராகுல் காந்தி கேள்வி

டெல்லி: ராணுவ வீரர்களை எந்த ஆயுதமும் இன்றி அனுப்பியது யார்? என்று வீடியோ காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா- சீனா 3,488 கிமீ தூர எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இதில் பல இடங்களில் இரு நாட்டு எல்லை சரியாக நிர்ணயிக்கப்படாததால் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, 3 ஆண்டுகளுக்குப்பிறகு, கடந்த மே மாதம் கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இரு நாட்டு ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, சுமார் 6 வாரங்களாக லடாக் எல்லையில் பதற்றம் நிலவி வரும் நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீனா ராணுவத்தினர் இடையே மீண்டும் பயங்கர கைகலப்பு ஏற்பட்டது.

இதில் இரு நாட்டு வீரர்களும் கற்களை வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த பயங்கர மோதலில் இரு தரப்பிலும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது. இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய  ராணுவத்தினர் பலியாயினர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர்  என கூறப்படுகிறது. 45 ஆண்டுக்குப் பிறகு இந்தியா - சீனா ராணுவம் இடையேயான  மோதலில் உயிர்பலி ஏற்பட்டுள்ளதால் போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. பிரச்சனை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி நாளை அனைத்து கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், இந்திய வீரர்களை கொன்று மிகப்பெரிய குற்றத்தை சீனா செய்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும், ஆயுதங்கள் இன்றி நிராயுதபாணியாக இந்திய வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அனுப்பியது யார்? இந்த நிலைமைக்கு யார் பொறுப்பு? என்றும் ராகுல் கேள்வி எழுப்பி உள்ளார்.

ராகுல் காந்தி டுவிட்:

இதனைபோல், எல்லையில் நிகழ்ந்த மோதல் குறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் நேற்று பதிவிட்ட ராகுல்காந்தி, பிரதமர் ஏன் மவுனமாக இருக்கிறார்? அவர் ஏன் மறைக்கிறார்? போதும். என்ன நடந்தது என்பது நமக்கு தெரிய வேண்டும். நம்முடைய வீரர்களை கொல்வதற்கு சீனாவுக்கு எவ்வளவு தைரியம்? நம்முடைய  நிலங்களை ஆக்கிரமிக்க அவர்களுக்கு என்ன தைரியம்? எனக் கேள்வி எழுப்பினார்.


Tags : soldiers , Who is responsible for the current situation ?; Who sent the soldiers without any weapons? ... Cong. MP Rahul Gandhi Question
× RELATED மண்டபம் அருகே பறக்கும் படையினர் தீவிர சோதனை