×

திருச்செந்தூர் அருகே கடலோர கிராமத்தில் எல்லையை காக்கும் இளைஞர்கள்

* கொரோனா பரிசோதனையின்றி வந்தால் அனுமதியில்லை

நெல்லை: கொரோனா தொற்று அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திருச்செந்தூர் அருகே கடலோர கிராமத்தில் உள்ளூர் மக்களே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இ.பாஸ் இல்லாமல் வருபவர்கள், பரிசோதனை செய்யாமல் யாரும் வந்தால் ஊருக்குள் அனுமதிப்பதில்லை. இந்தியாவிலேயே மகாராஷ்டிராவிற்கு அடுத்து தமிழகம் தான் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று சென்னையில் உச்சத்தை தொட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் பல மாவட்டங்களிலும் பரவி வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தொற்று அச்சத்தால் பலர் ஊர் திரும்பியுள்ளனர். இதுதவிர சென்னையில் இருந்தும் தற்போது பலர் ஊர் திரும்பி வருகின்றனர். வாடகை வேன், கார், பைக் என வாகனங்களில் சொந்த ஊர் திரும்புபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதில் முறையாக இ.பாஸ் பெற்று வருபவர்கள் அந்தந்த மாவட்ட எல்லையில் நிறுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதன் பின்பே விடுவிக்கப்படுகின்றனர். ஆனால் இ பாஸ் இல்லாத பலர் கிராமங்களுக்குள் ஊடுருவி தொற்று பரவலுக்கு காரணமாகி விடுகின்றனர். இதை தடுக்க தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன்பட்டினம் கடலோர கிராமத்தில், இளைஞர்கள் தெருவுக்கு செல்லும் சாலைகளை அடைத்து தொடர்ந்து காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊரைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் கப்பலில் பணியாற்றி வருகின்றனர். எனவே வளியூரில் இருந்து யாரும் ஊருக்குள் வந்தால் தொற்று பரவக் கூடாது என்பதை கண்காணிக்க வீரபாண்டியன்பட்டினம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே உள்ள தெரு, மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தெரு, மடோனா தெரு பகுதிகளில் தெருக்களை அடைத்து காவல் பணியில் ஊர் இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முறையாக இ பாஸ் பெற்று, கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே உள்ளே  அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் தவிர புதியவர்கள் யாராவது வந்தால் அனுமதி மறுக்கப்படுகிறது. கொரோனா தடுப்பு பணியில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் ஊரில் மற்றவர்களுக்கு தொற்று பரவி விடக் கூடாது என்பதில் உஷாராக உள்ளனர். இதற்காக இரவு பகல், பாராது காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த இளைஞர்களின் ஊர் காக்கும் பணி பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.



Tags : border ,village ,Thiruchendur , Young people, guarding , border, coastal village ,Thiruchendur
× RELATED தமிழ்நாடு – ஆந்திர எல்லைப் பகுதியில்...