×

முறையாக தூர்வாரப்படாத திக்கணங்கோடு கால்வாய்

* தண்ணீர் செல்வதில் சிக்கல்: விவசாயிகள் பரபரப்பு குற்றச்சாட்டு

கருங்கல் : குமரி மாவட்டத்தில் திக்கணங்கோடு, மத்திகோடு ஊராட்சிகள், பாலபள்ளம் பேரூராட்சி போன்ற  பகுதிகளில் உள்ள விவசாயிகள் திருவிதாங்கோடு கால்வாயில் இருந்து  பிரிந்து வரும் திக்கணங்கோடு சானல் கால்வாயால் பயன் அடைந்து வருகின்றனர். இந்த கால்வாய் முகமாற்றூர்,  மல்லன்விளை, புங்கறை, பூக்கடை, நங்கச்சிவிளை, தெங்கன்குழி, சைப்பன்,  திக்கணங்கோடு, கோட்டவிளை, நெல்லிமூடு, கறுக்கன்குழி, வழுதலம்பள்ளம் வழியாக  செல்கிறது. ஒரு கால்வாய் பிரிந்து தாறாவிளை, சேனம்விளை, படுவாக்கரை, வழியாக  பெத்தேல்புரம் செல்கிறது.  திக்கணங்கோடு கால்வாயை தூர்வாருவதில் முறைகேடு  நடைபெற்று இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.  இக்கால்வாய் பல ஆண்டுகளாக சரியாக தூர்வாரப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இந்த  வருடமும் திக்கணங்கோடு கால்வாயை ஏனோதானோ என்று தூர்வாரி விட்டு  கழிவுகள் மற்றும் மண்ணை அப்புறப்படுத்தாமல்  கால்வாயின் உள்ளேயே குவித்து வைத்து விட்டு சென்றுள்ளனர். இதனால்  கால்வாயில் பல இடங்களில் சுமார் 2 அடிக்கும் மேல் மண் நிறைந்து  காணப்படுகிறது.

இதனால் தற்போது விவசாயத்திற்காக அணைகள் திறக்கப்பட்டுள்ள நிலையிலும் கடை வரம்பு பகுதிகளுக்கு தண்ணீர் செல்லவில்லை. மேலும்  திக்கணங்கோடு பொன்ஜெஸ்லி திருமண மண்டபம் அருகில் சுமார் 250 மீட்டர் தூரம்  கால்வாய் தூர்வாரி ஆக்ரமிப்புகள் அகற்றப்படவில்லை. மேலும் அப்பகுதியில்  கால்வாயின் கரை பகுதி இடிந்து கால்வாயினுள் விழுந்துள்ளது. கால்வாயை இயந்திரங்கள்  மூலம் தூர்வாருவதுதான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இக் கால்வாய்களின் இருபுறங்களிலும் திக்கணங்கோடு  சைப்பன் முதல் வழுதலம்பள்ளம், முக்காடு பகுதிகள் வரை பல பகுதிகளில்  ஆங்காங்கே தனியார் ஆக்ரமிப்பு செய்து கட்டடங்கள்,  கழிவறைகள், சமையல் கூடங்கள் கட்டி உள்ளனர்.  சிலர்  கால்வாயின் கரை பகுதிகளை வேலி போட்டு  வைத்துள்ளனர். பலர் வீடுகளில் இருந்து வரும் கழிவு நீரை  குழாய்கள் அமைத்து இந்த கால்வாயில் விட்டுள்ளனர். இதை எல்லாம்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருக்கிறார்கள்.

 இந்த கால்வாய்களை தூர்வாரும் பணிகளில் மிகப்பெரிய முறைகேடு நடைபெற்று  இருப்பதாக இப்பகுதி  விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அதனால் திக்கணங்கோடு  கால்வாய் தூர்வாரியதில் முறைகேடு செய்த ஒப்பந்ததாரர் மற்றும் பொதுப்பணித்துறை  அதிகாரிகள் மீது கடுமையான அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது  விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. பொதுப்பணித்துறை நீராதார அமைப்பு கால்வாயை முறையாக பராமரிக்காததால்  கால்வாய் புதர் மண்டி தூர்ந்து தண்ணீர் செல்ல முடியாமல் காணப்படுகிறது.  இதனால் கடைமடை பகுதி வரை முறையாக தண்ணீர் செல்வதில்லை. இக்கால்வாயில் பல இடங்களிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பழுதடைந்து காணப்படும் ஷட்டர்களும்  இதுவரை சரி செய்யப்படவில்லை.

தூர்வாராமல் காணப்படும் பகுதிகள் மற்றும் தூர்வாரி  கால்வாயினுள் குவித்துள்ள மண்ணை அகற்றுவது பற்றி கோதையாறு வடிநில கோட்டம்  தக்கலையில் உள்ள பொது பணித்துறை  உதவி பொறியாளர் மற்றும் அதிகாரிகளிடம்  கேட்டால் அவர்கள் சரியான பதிலை தரவில்லை. ஆகவே உடனடியாக  திக்கணங்கோடு  கால்வாய் பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு ஷட்டர்களை  சரி செய்து உடைப்பு ஏற்பட்ட இடங்களையும் சரி செய்து  கால்வாயில் தூர்வாராத  இடங்களை தூர்வாரியும், தூர்வாரி கால்வாயின் உள்ளே கூட்டி வைத்துள்ள மண்ணை  முழுவதுமாக அகற்ற  போர்க்கால  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  மத்திகோடு, திக்கணங்கோடு, பாலப்பள்ளம், செம்பென்விளை, மணலி, சேனம்விளை,  படுவாக்கரை, பெத்தேல்புரம், பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெரும் முறைகேடு
இது குறித்து சமூக ஆர்வலர் எட்வின் ஜோஸ் கூறுகையில், திக்கணங்கோடு கால்வாய்  தூர்வாரியதில் முறைகேடு  நடைபெற்றுள்ளது. குறிப்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள்,  ஒப்பந்ததாரர் கூட்டணி வைத்து வேலை செய்வதால் தரமற்ற முறையில் பணி நடக்கிறது. குறிப்பாக சைப்பன் முதல் திக்கணங்கோடு வரை தூர்வாரிய  இடங்களில் கால்வாயினுள் நின்ற செடி கொடிகளை சரியான முறையில் அகற்றாததால்  செடி கொடிகள் மீண்டும் துளிர்த்து காணப்படுகிறது. ஆற்று  தண்ணீரில் வரும் கவர்கள் போன்ற கழிவுகள் இந்த செடி கொடிகளில் சிக்கி  தண்ணீர் செல்வது தடைபடும். அதுபோல் பொன்ஜெஸ்லி திருமண மண்டபம் அருகில் உள்ள  பகுதிகளில் தூர்வாராமல் அப்படியே விட்டுள்ளனர். அப்பகுதியில்  மண் அரிப்பு  ஏற்பட்டு கால்வாயினுள் மண்  விழுந்துள்ளது. இதனால் கடை வரம்பு  பகுதிகளுக்கு தண்ணீர் சென்று சேர்வது சந்தேகமே.  திக்கணங்கோடு கால்வாய்  தூர்வாரியதில் மிகப்பெரிய அளவிலான முறைகேடு நடைபெற்றுள்ளது. ஆகவே இதனை  விஜிலென்ஸ் மூலம் விசாரனை செய்து தவறு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகள்  மற்றும் ஒப்பந்ததார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Canal , Canal , formally ,insulated ,ditch
× RELATED பத்தமடையில் இடிந்து காணப்படும்...