காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் அதிருப்தி: பொதுப்பணித்துறை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

ஈரோடு: பவானிசாகர்  அணையில் போதிய தண்ணீர் இருந்தும் நடப்பாண்டு காலிங்கராயன் பாசனத்திற்கு  தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும்,  பொதுப்பணித்துறையினர் வேண்டுமென்றே தண்ணீர் திறப்பை தாமதப்படுத்தி வருவதாக  குற்றம்சாட்டி உள்ளனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து  கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு தனியாக வாய்க்காலில் தண்ணீர்  திறக்கப்படுகிறது. இந்த அணையில் மற்ற பாசனங்களான தடப்பள்ளி அரக்கன்கோட்டை,  காலிங்கராயன், கொடிவேரி உள்ளிட்ட பாசனங்களுக்கு பவானி ஆற்றில் தண்ணீர்  திறக்கப்பட்டு பகிர்ந்தளிக்கப்படுகிறது. பவானி ஆற்றில் வரும் நீரானது  பவானி அருகே காலிங்கராயன்பாளையம் என்ற இடத்தில் உள்ள அணைக்கட்டில் தேக்கி  வைக்கப்படுகிறது. பின்னர், அங்கிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம்  பாசனத்திற்கு தண்ணீர் விடப்படுகிறது. இந்த பாசனங்கள் மூலம் 15,743 ஏக்கர்  நிலம் பாசனம் பெற்று வருகிறது.

ஆண்டுதோறும் ஜூன் 16ம் தேதி முதல்  ஏப்ரல் 30ம் தேதி வரை பாசனத்திற்கு திறக்கப்படும். தண்ணீர் நிறுத்தப்படும்  காலங்களில் வாய்க்கால் பராமரிப்பு பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு  வருகின்றனர். ஆனால், இந்தாண்டு அணையில் போதிய அளவு தண்ணீர் இருப்பு இல்லை  என்ற காரணம் காட்டி நேற்று முன்தினம் காலிங்கராயன் பாசனத்திற்கு திறக்க  வேண்டிய தண்ணீரை திறக்காமல் உள்ளனர்.

பவானிசாகர் அணையில் தற்போது 79.84  அடி தண்ணீர் இருப்பு உள்ளது. மேலும், அணைக்கு 900 கன அடி வரத்து உள்ள  நிலையில் ஆற்றில் 200 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கடந்த மே 8ம் தேதி  காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் வழக்கமாக  பாசனத்திற்கு ஜூன் 16ம் தேதி நீர் திறக்கப்படும் என விவசாயிகள்  எதிர்பார்த்தனர். ஆனால், அணையில் போதிய தண்ணீர் இருந்தும்  பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாசனத்திற்கு குறிப்பிட்ட காலத்தில் தண்ணீர்  திறக்காததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், அணையில் தண்ணீர்  பற்றாக்குறையை காரணம் காட்டி தண்ணீர் திறப்பை தாமதப்படுத்துவது ஏன்? என  விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

தற்போது வாய்க்காலில் தண்ணீர்  இல்லாமல் சாக்கடை கழிவுநீர் பெருக்கெடுத்து செல்கிறது. ஒரு சில பகுதிகளில்  வாய்க்காலில் ஆங்காங்கே புதர்மண்டி காட்சியளிக்கிறது. வாய்க்கால் சீரமைப்பு  பணிகளை குறிப்பிட்ட காலத்தில் மேற்கொள்ள வேண்டும் என்றும், பருவத்திற்கு  ஏற்ற வகையில் தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

இதுகுறித்து  காலிங்கராயன் பாசன சபை தலைவர் வேலாயுதம் கூறுகையில்,`வழக்கமாக பாசனத்திற்கு  ஜூன் 16ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்தாண்டு அணையில்  போதிய தண்ணீர் இருந்தும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை திறக்காமல்  உள்ளனர். தண்ணீர் திறப்பது எப்போது என்பதையும் அறிவிக்காமல் உள்ளனர். வழக்கமாக  மஞ்சள் சாகுபடி ஜூன், ஜூலை மாதங்களில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில்  தண்ணீர் திறந்தால்தான் பயனுள்ளதாக இருக்கும். ஒரு ஏக்கரில் 40 குவிண்டால்  மஞ்சள் சாகுபடி இருக்கும். பருவம் தவறி சாகுபடி செய்வதால் ஏக்கருக்கு 20  முதல் 25 குவிண்டால் மட்டுமே எடுக்க முடியும். குறிப்பிட்ட காலத்தில்  வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும். அப்போது தான் விவசாயிகளுக்கு  பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.

Related Stories:

>