×

கொரோனா பரவல் பீதியில் 15 நாள் முழு ஊரடங்கை அறிவித்த கிராம மக்கள்

பொன்னமராவதி: பொன்னமராவதி அருகே கொரோனா பரவல் பீதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 நாட்கள் முழு ஊரடங்கை கிராம மக்கள் அறிவித்து அப்பகுதியில் பேனர் மற்றும் பதாகைகளை வைத்துள்ளனர். பொன்னமராவதி நகரம் மற்றும் ஒன்றியத்தில் கடந்த சில நாட்களில் 13 நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பொன்னமராவதி நகரத்தின் மிக அருகே உள்ள தொட்டியம்பட்டி மற்றும் பி.உசிலம்பட்டி ஆகிய 2 ஊராட்சிகளில் உள்ள ஒரு கிராமம் கட்டையாண்டிப்பட்டி. இந்த கிராமத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகயாக கடந்த 15ம் தேதி 250க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த ஊர் பொதுமக்கள் பொன்னமராவதி பகுதியில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றிலிருந்து தங்களது கிராமத்து மக்களை பாதுகாக்க முடிவு செய்து தேவையான பொருட்களை ஊர் மக்கள் வாங்கிக் கொள்வது, பிறகு இன்று (நேற்று)முதல் 15 நாட்களுக்கு கிராமத்தை சேர்ந்தவர்கள் யாரும் வேலைக்கு செல்வதில்லை.

அரசின் அறிவுரையின்படி அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாரத்திற்கு ஒரு நாள் வீட்டுக்கு ஒருவர் மட்டுமே முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். வீட்டுக்கு வந்தவுடன் கைகளை சோப்பால் கழுவ வேண்டும். வெளியாட்கள் கிராமத்திற்குள் உள்ளே வரக்கூடாது என்று முடிவு செய்து அறிவித்துள்ளனர். இங்குள்ள மக்கள் அனைவரும் அன்றாடம் கட்டுமான வேலைகளுக்கு செல்லும் கூலித் தொழிலாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரின் விலக்கு சாலையில் இருந்து ஊருக்கு செல்லும் வழியில் போலீசாரிடமிருந்து பேரிகார்டை வாங்கி அமைத்தும், பேனர்களையும் வைத்துள்ளனர்.

Tags : Corona , Villagers,announcing ,15-day full-day ,Corona spread panic
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...