×

41 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு ஏலம் விடும் நடைமுறையை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி: 2.8 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்!!

டெல்லி : சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள 41 நிலக்கரி சுரங்கங்களை வர்த்தக சுரங்க பணிகளுக்கு ஏலம் விடும் நடைமுறையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடியே காணொளி மூலம் தொடங்கி வைத்தார். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஏற்கனவே சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ், நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்படும் என்ற பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, 41 நிலக்கரி சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன.

எரிசக்தி, எக்கு, அலுமினியம் மற்றும் இரும்புத் தொழிற்சாலைகளுக்கு அடிப்படை ஆதாரத் தேவையாக நிலக்கரி விளங்குகிறது. தற்போது வர்த்தக ரீதியில் நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விடுவதன் மூலம், புதிய தொடக்கம் ஏற்படும் என்று மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் நாட்டின் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்வதுடன், தற்சார்பு நிலையை இந்தியா அடைய முடியும் என்றும் தொழிற்சாலை மேம்பாடும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய நிலக்கரித்துறை அமைச்சகமும் ஸ்விக்கியும் இணைந்து ஏல நடைமுறைக்கு ஏற்பாடு செய்துள்ளன. 2 கட்ட மின்னணு ஏல நடைமுறைக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரலாற்று சிறப்பு மிக்க அரசின் இந்த நடவடிக்கையால், உற்பத்தியை அதிகரிப்பதில் தனியார் பங்களிப்பு உத்வேகம் பெறும் என்றும் போட்டி அதிகரித்து உற்பத்தித் திறன் நவீன உபகரணங்களின் மூலம் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 33 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடு வரும்  என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 70 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 2.10 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Modi ,auction , Coal, Mines, Private, Auction, Procedure, PM Modi, Job Opportunity
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...