×

ஜெர்மனியில் கோங்கா நடனமாடி கின்னஸ் உலக சாதனை படைத்த 8 நாய்கள்: நடனத்தை பார்த்து வியந்துபோன கின்னஸ் அமைப்பினர்!!

பெர்லின்: ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமி, தனது 8 நாய்களை கோங்கா நடனமாட வைத்து சாதனை படைத்துள்ளார். ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமி அலெக்சா லான்பர் தனது வீட்டில் விதவிதமான நாய்களை வளர்த்து வருகிறார். அவைகளுக்கு பயிற்சி கொடுப்பதே அலெக்சாவின் முக்கிய பணியாகும். அதன்படி, கோங்கா நடனத்தை தான் தனது நாய்களுக்கு பயிற்சி அளித்திருக்கிறார் அலெக்சா. ஒருவர் பின் ஒருவர் தோளில் கை வைத்தப்படி வரிசையாக நின்றுகொண்டு ஆடும் லத்தின் அமெரிக்க நடனத்துக்கு பெயர் கோங்கா. கிட்டத்தட்ட சிறு வயதில் விளையாடும் ரயில் விளையாட்டை ஒத்தது தான் இந்த நடனம்.

அலெக்சா சொல்வதை அப்படியே கேட்டு நடக்கும் எட்டு நாய்கள், முன்காலை தூக்கி வைத்துக்கொண்டு ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நடந்து சென்று கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கின்றன. கின்னஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் முன்னிலையில் நிகழ்ந்த இந்த சாதனையின் போது, எட்டு நாய்களும் சுமார் 5 மீட்டர் தூரத்தில் கோங்கா வரிசையில் நடந்து அசத்திவிட்டன. நாய்களின் இந்த அட்டகாசமான செயலை பார்த்து வியந்துபோன கின்னஸ் அமைப்பினர், சிறுமி அலெக்சாவை பாராட்டித் தள்ளிவிட்டனர். மேலும் தங்களுடைய முகநூல் பக்கத்தில் நாய்களின் கோங்கா நடன வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு பகிர்ந்துள்ளது. 


Tags : Germany , Germany, Gonga, Dancing, Guinness, World Record, Dogs
× RELATED சில்லி பாய்ன்ட்…