×

மாமூல் வாங்குவதில் முன்விரோதம் பிரபல ரவுடி வெட்டி கொலை: 9 பேர் கும்பலுக்கு வலை

திருவொற்றியூர்: எர்ணாவூரில் மாமூல் வாங்குவதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் பிரபல ரவுடியை வெட்டி கொலை செய்த 9 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். திருவொற்றியூர் அருகே எர்ணாவூர், கன்னிலால் லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சின்னமுத்து (46). எண்ணூரில் 2003ம் ஆண்டுகளில் பிரபல ரவுடியாக வலம் வந்தவர். குடும்பம் இல்லை. இவர் மீது ஆள்கடத்தல், கொலை முயற்சி, மாமூல் கேட்டு மிரட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் எண்ணூர், சாத்தாங்காடு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, எண்ணூரில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்ததால், கடந்த சில நாட்களுக்கு முன் எர்ணாவூரில் கன்னிலால் லே-அவுட் பகுதியில் ஒரு வாடகை வீட்டில் சின்னமுத்து குடியேறியதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில் சின்னமுத்து வீட்டில் தனியே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது 9 பேர் கும்பல் வீட்டுக்குள் புகுந்து சின்னமுத்துவை கத்தி, அரிவாளால் சரமாரி வெட்டியது. இதிலிருந்து சின்னமுத்து தப்பி வெளியே ஓடிவந்தார்.
தொடர்ந்து அவரை அக்கும்பல் ஓட ஓட விரட்டி, கத்தி மற்றும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றது. பின்னர் அக்கும்பல் ஆட்டோவில் ஏறி தப்பி சென்றது. முகம் சிதைந்த நிலையில் சின்னமுத்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் போலீசார், சின்னமுத்துவின் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தபோது, அதே பகுதியை சேர்ந்த பாம்பு நாகராஜ் என்ற ரவுடிக்கும், சின்ன முத்துவுக்கும் மாமூல் வசூலிப்பதில் முன் விரோதம் இருந்து வந்தது.

இதனால் பாம்பு நாகராஜ் மற்றும் அவனது கூட்டாளிகள் சின்ன முத்துவை வெட்டி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, பாம்பு நாகராஜின் கூட்டாளி தங்கமுத்து (21) என்பவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், கொலையாளிகள் பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, தலைமறைவாக உள்ள பாம்பு நாகராஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் 9 பேரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Munvirotam Famous Rowdy Killed , Mamul, antagonist, celebrity bully, killed
× RELATED புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் காலை 8 மணி முதல் மின்சாரம் துண்டிப்பு