×

இன்று நள்ளிரவு முதல் 30ம் தேதி வரை அனுமதி சீட்டு இன்றி சுற்றினால் வாகனம் பறிமுதல்: போக்குவரத்து கூடுதல் கமிஷனர் அருண் எச்சரிக்கை

சென்னை: இன்று நள்ளிரவு முதல் அனுமதி சீட்டு இன்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை காவல் பகுதியில் 19ம் தேதி அதிகாலை முதல் 30ம் தேதி இரவு 12 மணி வரை 12 நாட்களுக்கு தமிழக அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி, சேவைகளில் போக்குவரத்திற்கு அனுமதி உண்டு. மருத்துவ தேவைகளுக்கு மட்டும் தனியார் வாகனம், ஆட்டோ, டாக்சி, உபயோகம் அனுமதிக்கப்படும்.  அத்தியாவசியப் பொருட்களை 2 கி.மீ.தொலைவிற்குள்் நடந்து சென்று வாங்கிக் கொள்ள வேண்டும். பிற இடங்களுக்கு வாகனங்களில் செல்வது முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திடம் இருந்து உரிய அடையாள அட்டைகளைப் பெற்று வாகனங்களில் செல்லுதல் வேண்டும். 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை காலை 10 மணி முதல் 2 மணி வரை வங்கிகள் சார்ந்த வாகனங்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் தங்களது வங்கியின் அடையாள அட்டையை காண்பித்து வாகனங்களில் செல்லுதல் வேண்டும். 21, 28ம் தேதி ஆகிய இரு ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வும் இன்றி முழு ஊரடங்கிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது அத்தியாவசிய பணி தவிர எவ்விதமான வாகனப் போக்குவரத்திற்கும் அனுமதி கிடையாது.  

விமானம் மற்றும் ரயில் பயணியர் தங்களது பயணச் சீட்டுகளை வைத்திருக்க வேணடும். அனுமதி சீட்டு இல்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். போலியான அனுமதிச் சீட்டுகளை வைத்து வாகனங்களை இயக்குவது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 பிரிவின்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். முதியோர் மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்றோர் இல்லங்கள், வீட்டில் தங்கி இருக்கும் முதியோர் மற்றும் நோயாளிகளுக்கு உதவி புரிவோர் மற்றும் அரசு, தனியார் தொண்டு நிறுவன ஊழியர்களுக்கும் வாகன அனுமதி வழங்கப்படும். இவர்கள் அரசின் tnepass.tnega.org என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். வாகனங்களில் செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைத் தவறாமல் கடைப்பிடிக்கவும், அவசியத் தேவை இல்லாமல் வாகனங்களில் வெளியே செல்வதைத் தவிர்த்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது தொடர்பாக சந்தேகங்கள் இருந்தால் போக்குவரத்து காவல்துறையின் கட்டுப்பாட்டு அறை எண் 044-23452330, 23452362, 9003130103 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Vehicle confiscated , midnight,today
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...