×

77 ஆய்வகங்களில் சோதனைக்கு அனுமதி கொரோனா சிகிச்சையில் மருத்துவ காப்பீடு: ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை தாக்கல்

சென்னை: தனியார் மருத்துவமனைகளில்,  முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.  கொரோனா பாதித்தவர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும், கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைக்க வேண்டும்,  கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முழு உடல் கவசம் வழங்க வேண்டும் எனக் கோரி வக்கீல் ஜிம்ராஜ் மில்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்குமா, அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக புகார் அளிக்க ஏதேனும் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா, அதிக கட்டண வசூல் குறித்த புகார்கள் மீது எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேபோல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகள் குறித்து தெரிவிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சார்பில் அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார்.

அதில், தமிழகத்தில் 44 அரசு ஆய்வகங்கள், 33 தனியார் ஆய்வகங்கள் என 77 ஆய்வகங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த ஜூன் 11ம் தேதி நிலவரப்படி 6 லட்சத்து 55 ஆயிரத்து 257 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 38 ஆயிரத்து 716 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனைகளில்  கொரோனா சோதனைக்கு ₹3000 கட்டணமும், சிகிச்சை பெறுபவர்களுக்கு தினமும் மருத்துவமனைகளின் தரத்தின் அடிப்படையில் பொதுமக்களுக்கு ₹5 ஆயிரம் முதல் ₹7,500 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தீவிரமாக தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைபெற ₹15,000  கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு 25 சதவீத படுக்கைகளை ஒதுக்கி வைக்க தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழும், தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் கீழும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறலாம் என்று கூறப்பட்டிருந்தது.

 மத்திய சுகாதாரத் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், தனியார் மருத்துவமனைகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வருவதால், கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக தமிழக அரசு தான் பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், விசாரணையை ஜூன் 19ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Tags : Medical Laboratories for Coronal Treatment in Laboratories ,Tamil Nadu Government Report 77 Laboratories , 77 Medical Laboratories,Coronal Treatment,Laboratories,Tamil Nadu Government, Report
× RELATED கொளத்தூர் தொகுதி பெரியார் நகரில் ₹110...