×

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமில்லாத உறுப்பினராக இந்தியா தேர்வு: ஆதரவளித்த நாடுகளுக்கு பிரதமர் மோடி டுவிட்டரில் நன்றி...!!

டெல்லி: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா தேர்வாக ஆதரவளித்த நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். ஐ.நா.பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 10 நாடுகள் நிரந்தரமல்லாத உறுப்பினர்களாக சுழற்சி முறையில் இடம்பெற்று வருகின்றன. 2020 - 21 ஆம் ஆண்டுக்கான நிரந்தரமில்லாத உறுப்பினர் தேர்தலில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திலிருந்து இந்தியா போட்டியிட்டது. வேறு எந்த நாடும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

தொடர்ந்து, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற இந்தத் தேர்தலில், பதிவான 192 வாக்குகளில் இந்தியாவிற்கு ஆதரவாக 184 நாடுகள் வாக்களித்துள்ளனர். இதன் மூலம், ஐ.நா.பாதுகாப்பு சபையின் நிரந்தரமில்லாத உறுப்பினராக 8 வது முறையாக இந்தியா தேர்வாகியுள்ளது. இந்தியா தவிர, அயர்லாந்து, மெக்சிகோ, நார்வே ஆகிய நாடுகளும் தங்களது பிராந்தியங்களிலிருந்து, ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தரமில்லாத உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தரமில்லாத உறுப்பினராக தேர்வாக ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி என்றும் உலக ஒற்றுமை, பாதுகாப்பை மேம்படுத்த அனைத்து நாடுகளுடன் இணைந்து இந்தியா பணியாற்றும் என்று பதிவிட்டுள்ளார்.


Tags : Modi ,India ,UN Security Council ,countries , India elected as a non-permanent member of the UN Security Council: Prime Minister Modi thanks Twitter for supporting countries ... !!
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...