×

ஆவடி மாநகராட்சியில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும்: திமுக கூட்டணி சார்பில் ஆவடி நாசர் வலியுறுத்தல்

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் கொரோனா பரிசோதனை மையம், தனிமைபடுத்துதல் முகாம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக கூட்டணி கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் வலியுறுத்தி உள்ளார். ஆவடி மாநகராட்சியில் கோரோனா தொற்று நோயால் 420க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தொற்றால் இதுவரை 17பேர் உயிரிழந்துள்ளனர். ஆவடி மாநகராட்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் பாதிக்கப்படும்  நோயாளிகள் போதுமான மருத்துவ வசதி இல்லாமல் தவிக்கின்றனர்.

இதற்கிடையில் திமுக கூட்டணி கட்சியினர் சார்பில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர், மாவட்ட மதிமுக துணைச்செயலாளர் வக்கீல் அந்திரிதாஸ் ஆகியோர் நேற்று  ஆவடி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர். மனு விவரம்:  ஆவடி மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை தனிமை படுத்த  திருத்தணி, திருவாலங்காடு என்று சுமார் 50கி.மீட்டர் தூரத்திற்கு மேல் அழைத்து சென்று அலைக்கழிக்கப்படுகின்றனர். அங்கும் நோயாளிகளுக்கு எந்தவித அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. இதனால், ஆவடி மாநகராட்சி பகுதியில் நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தும் முகாம் அமைக்க வேண்டும்.

மேலும், ஆவடியில் கொரோனா பரிசோதனை மையம் இல்லாமல் பொதுமக்கள் அல்லல்படுகின்றனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய  ரூ. 5 ஆயிரம் வரை செலவு செய்ய வேண்டிய  நிலை உள்ளது. எனவே, ஆவடி  உள்ள அரசு பொது மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மையம் அமைக்க வேண்டும். இதோடு மட்டுமில்லாமல், மாநகராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுகாதார ஊழியர்கள்  நேரடியாகச் சென்று தொற்று தடுப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Establishment ,Corona Testing Center ,Awadi Nasser ,Awadhi Corporation ,DMK Alliance Awadhi Nasser ,DMK , Awadi Corporation, Corona, DMK Alliance, Awadi Nasser
× RELATED கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் 5ம்...