×

முதல்வர் அலுவலகத்தில் பணிபுரிந்த தனி செயலாளர் கொரோனாவுக்கு பலி: தலைமை செயலக ஊழியர்கள் பீதி

சென்னை: முதல்வர் எடப்பாடி அலுவலகத்தில் பணிபுரியும் தனி செயலாளர் கொரோனாவுக்கு நேற்று பலியானார். இதனால் தலைமை செயலக ஊழியர்கள் பீதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தினசரி 1,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதை தடுக்க இன்று நள்ளிரவு முதல் 12 நாட்கள் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 150க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து, மற்ற ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க தலைமை செயலக பணியாளர்கள் வருகையை 33 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று முதல்வர் எடிப்பாடி பழனிசாமிக்கு தலைமை செயலக ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலகத்தில் பணிபுரியும் தனி செயலாளர் தாமோதரன் (55), சென்னை, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார். இவர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் வேலைக்கு வராமல் இருந்தார். கொரோனா அறிகுறி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கடந்த 12ம் தேதி  சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல், நேற்று மரணம் அடைந்தார்.

தலைமை செயலகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் பீதியுடனே பணியாளர்கள் வேலைக்கு வந்து செல்கின்றனர். தற்போது தலைமை செயலக ஊழியர் ஒருவர் கொரோனாவுக்கு முதலாவதாக மரணம் அடைந்துள்ளார். இதனால் தலைமை செயலக ஊழியர்கள் பீதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை பெற்று வருபவர்கள், அதிகளவில் மரணம் அடைந்து வருகிறார்கள். நேற்று முன்தினம் மட்டும் தமிழகத்தில் 49 பேர் மரணம் அடைந்தனர். இதில் சென்னையில் மட்டும் கொரோனா நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த 41 பேர் இறந்துள்ளனர். நேற்றும் சென்னை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்த நிலையில், முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் தனி செயலாளர் ஒருவர் இறந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதல்வர் எடப்பாடி இரங்கல் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை
முதல்வரின் அலுவலகத்தில் பணிபுரியும் தனி செயலாளர் தாமோதரன் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தலைமை செயலகத்தில் முதலமைச்சர் அலுவலக பிரிவில் முதுநிலை தனி செயலராக பணியாற்றி வந்த பி.ஜே.தாமோதரன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். கொரோனா தடுப்பு பணியின்போது, அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய தாமோதரனின் சேவை மகத்தானது. அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். தாமோதரன் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Coroner ,private secretary ,office Coroner ,CM , Coroner kills ,private secretary , worked , CM's office
× RELATED சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு...