×

திருவள்ளூர் அருகே நில தகராறில் அண்ணி கொலை: அண்ணன், தம்பி கைது,..பஸ் டிரைவர், போலீஸ்காரருக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே நில தகராறில், அண்ணியை உருட்டுக்கட்டையால் அடித்தும், கத்தியால் தாக்கியும் கொலை செய்த அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த கைவண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வநாயகம் (64). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு அருள், பரிமளம், சற்குணம் என 3 சகோதரர்கள். இவர்களில் சற்குணம் இறந்து விட்டார். இவர்களுக்கு இடையே கடந்த 20 ஆண்டுகளாக நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த 26ம் தேதி மாலையில் செல்வநாயகம், தனது நிலத்தில் அறுவடை செய்த நெல்லை, அருளின் நிலத்தில் கொட்டி வைத்துள்ளார்.

இதை அருள், தட்டி கேட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அருள், பரிமளம் மற்றும் சற்குணத்தின் மகன்கள் ராஜாமணிமொழி, செழியன் ஆகியோர், வீட்டின் வெளியே நின்றிருந்த செல்வநாயகத்தின் மனைவி இன்பவள்ளியை (54) தகாத வார்த்தைகளால் பேசியதோடு, உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கி கத்தியால் தலையில் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த இன்பவள்ளி அலறி துடித்தார். மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, கடந்த 28ம் தேதி இன்பவள்ளி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் செல்வநாயகம் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து அருள், பரிமளம் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான மாநகர பஸ் டிரைவரான ராஜாமணிமொழி, ரயில்வே போலீஸ் செழியன் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags : Murder ,Bus driver ,policeman ,Tiruvallur , Thiruvallur, land dispute, sister-in-law murder, brother, brother arrested, bus driver, policeman
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் தம்பியை...