×

ஊத்துகோட்டை அருகே குடிமகன்கள் அலைமோதியதால் டாஸ்மாக் கடை திடீர் மூடல்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, டாஸ்மாக் கடைகளில் அலை மோதிய குடிமகன்கள் கூட்டத்தால்  கடை திடீரென மூடப்பட்டது.
சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில், நாளை முதல் 30ம் தேதி வரை, 12 நாட்களுக்கு தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதனால் சென்னை, ஆவடி, திருநின்றவூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் புறநகர் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மதுபானங்களை வாங்கி குவித்து வைக்கிறார்கள்.  இந்நிலையில், ஊத்துக்கோட்டை அருகே மெய்யூர் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று சென்னை, ஆவடி, அம்பத்தூர், திருநின்றவூர் போன்ற பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள் சரக்குகளை வாங்க  நேற்று சமூக இடைவெளியின்றியும்,  முண்டியடித்தும் நீண்ட வரிசையில் நின்றனர்.  

இதனால், குடிமகன்களின் கூட்டம் அதிகமானதால் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையை திடீரென மூடினர்.
பின்னர், ஒரு மணி நேரம் கழித்து கூட்டம் சற்று குறைந்ததும் மீண்டும் கடையை திறந்து விற்பனை செய்தனர். இதனால், மெய்யூர் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், வெங்கல் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கும் சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த குடிமகன்கள், ஊரடங்கில் சரக்கு கிடைக்காது என்பதால் பெட்டி பெட்டியாக சரக்குகளை வாங்கிச்செல்கின்றனர். இதனால், உள்ளூர் குடிமகன்கள் சரக்கு இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

இது குறித்து குடிமகன்கள் கூறுகையில், ‘எங்கள் கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து சென்னையை சேர்ந்தவர்கள் அதிக அளவு மதுபானங்களை  வாங்கிச்செல்வதால், இப்பகுதியை சேர்ந்த எங்களுக்கு சரக்கு கிடைப்பது இல்லை. இதனால், தமிழக எல்லை ஒட்டியுள்ள ஆந்திராவுக்கு சென்று சரக்கு வாங்கினால் அங்கு ஒரு குவாட்டருக்கு  80 முதல் 150 வரை கூடுதலாக விற்பனை செய்கிறார்கள்’ என்றனர்.

Tags : Citizens ,Uthukkottai ,task shop , Cottage, Citizens, Task mac, Closure
× RELATED ஏரியில் அளவுக்கதிகமாக மண் எடுப்பதை கண்டித்து போராட்டம்