×

நாளை முதல் முழு ஊரடங்கு சோதனை சாவடிகளில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்க முடிவு

திருவள்ளூர்: மாவட்ட  அளவில் நாளை முதல் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு மற்றும் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் கண்காணிப்பு அலுவலர்களான நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன், ரயில்வே ஐஜி வனிதா ஆகியோர் தலைமையில், கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில், கண்காணிப்பு அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் ஆகியோர், ‘’மாவட்டத்தில் நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள், கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டது.
மேலும், மாவட்டத்தின் அனைத்து எல்லைப் பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அமைப்பது, சிசிடிவி கேமராக்களைப் பொருத்தி கண்காணிப்புப் பணிகளில்  ஈடுபடுவதற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டது.

ஊரடங்கின்போது மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு குழுக்கள் அமைத்து ரோந்து பணியில் ஈடுபடவும்,  விழிப்புடன் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. இக்குழுவினர் நான்கு சக்கர வாகனங்களின் போக்குவரத்தை தடுக்கவும், கடைகளில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்தல், முகக்கவசம் அணிதல், கிருமி நாசினிகள் தெளித்தல் உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், நோய் தொற்று உள்ள  பகுதிகளில் மருத்துவ முகாம்கள் அமைத்து, நோய் அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து தொடர் நடவடிக்கை எடுக்கவும்,  அம்முகாம்கள் வாயிலாக அனைத்து இல்லங்களுக்கும் கபசுர குடிநீர் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.

ஆதரவற்றோர் மற்றும் கைவிடப்பட்டு தெருக்களில் சுற்றித்திரிபவர்களை  மீட்டு, அவர்களை பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவைகளில் தங்க வைத்து, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கவும் அலுவலர்களை அறிவுறுத்தினர். கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. அரவிந்தன். ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் லோகநாயகி, ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் மற்றும் சுகாதார துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Full curfew, CCTV camera
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...