×

பிரதமரை விமர்சித்து ட்வீட்; சிஎஸ்கே டாக்டர் நீக்கம்

சென்னை: சீனாவுடனான மோதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக பிரதமரை விமர்சித்து தகவல் பதிந்த  விளையாட்டு சிறப்பு மருத்துவரை  சென்னை  சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக நீக்கியுள்ளது. சென்னையை சேர்ந்தவர் டாக்டர் மது தொட்டபில்லில். இவர் விளையாட்டு மருத்துவத்தில் சிறப்பு பட்டம் பெற்றவர். கடந்த பல ஆண்டுகளாக  தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உட்பட பல்வேறு சங்கங்களில் விளையாட்டு மருத்துவ ஆலோசகராக பணியாற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் களமிறங்கும் சிஎஸ்கே அணியின் மருத்துவராகவும் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், சீன தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததை...‘சும்மா ஆர்வம்தான்... சவப்பெட்டிகள் வரும்போது அதில் பிரதமர் அக்கறை’ என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்குமா’  என்று ட்வீட் செய்திருந்தார்.

கொரோனா ஒழிப்பு பணிகளுக்காக ‘பிஎம் கேர்ஸ்’என்ற பெயரில் பிரதமர் நன்கொடை  வசூலிப்பதை விமர்சிக்கும் வகையில் அவர் பதிவிட்ட இந்த ட்வீட் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து, சிஎஸ்கே நிர்வாகம் ‘அணி மருத்துவர்’என்ற பொறுப்பில் இருந்து டாக்டர் மதுவை அதிரடியாக நீக்கி உள்ளது. ‘சமூக ஊடகமொன்றில்  டாக்டர் மது தனிப்பட்ட முறையில் செய்த ட்வீட் குறித்து நாங்கள் அறிந்திருக்கவில்லை. அவர் உடனடியாக சிஎஸ்கே அணியின் மருத்துவர் பொறுப்பில் இருந்து  இடைநீக்கம் செய்யப்பட்டார். எங்கள் கவனத்துக்கு வராமல் வெளியிடப்பட்டுள்ள அந்த தரமற்ற கருத்துக்கு  வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம் என்று சிஎஸ்கே தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Removal ,Doctor ,CSK , PM, tweet, CSK doctor dismissal
× RELATED பூசணி விதையின் பயன்கள்!