×

சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் ராமநாதபுரத்தில் நல்லடக்கம்...பொதுமக்கள் நேரில் அஞ்சலி...!

சாயல்குடி: லடாக் எல்லையில் சீன ராணுவம் தாக்கியதில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த ராணுவீரர் பழனி (40) வீரமரணம் அடைந்தார். அவரது உடல் மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, ராணுவ உயரதிகாரிகளின் மரியாதைக்கு பிறகு ராணுவ விமானத்தில் மதுரை விமான நிலையத்துக்கு நேற்று நள்ளிரவு கொண்டு வரப்பட்டது. அங்கு மதுரை கலெக்டர் வினய் உள்ளிட்ட அதிகாரிகள் மரியாதைக்கு பிறகு, ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

அங்கிருந்து ராணுவ வாகனத்தில் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, கடுக்கலூரில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து, வீரமரணமடைந்த பழனியின் உடல் சொந்தமான விவசாய இடத்தில் 21 குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்ந நல்லடக்கத்தின்போது ஊர்பொதுமக்கள் பழனியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். மேலும், ராமநாதபுரம் எம்.பி.நவாஸ்கனி மற்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகனும் நேரில் அஞ்சலி செலுத்தினர்.  

கலெக்டர் வீரராகவ ராவ் நேற்று பழனியின் பெற்றோர், மனைவி வானதிதேவி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். கலெக்டரிடம், வானதிதேவிக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என குடும்பத் தினர் கோரிக்கை விடுத்தனர். திமுக நிதியுதவி: பழனியின் குடும்பத்தாருக்கு தி.மு.க. சார்பில் ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. இதில் மாவட்ட  பொறுப்பாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் அமைச்சர்  சத்தியமூர்த்தி உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.

Tags : Palani ,attack ,China ,Ramanathapuram , Palani's body honored in Chinese attack: Ramanathapuram
× RELATED பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை: பாஜ மாவட்ட செயலாளர் கைது