பண்ருட்டியில் தொடரும் அவலம்; நகராட்சி குப்பைகளை எரித்ததால் புகைமூட்டம்: மூச்சுத்திணறி பசுமாடு பலி

இடத்தை மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பண்ருட்டி: பண்ருட்டி நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் சில ஆண்டுகளாக கெடிலம் ஆற்றங்கரையில் உள்ள சுடுகாட்டில் கொட்டப்படுகிறது. இதனால் சுடுகாடு குப்பை மேடாக காட்சியளிக்கிறது. மேலும் பொதுமக்கள் இறந்தவர்களின் உடலை புதைக்க இடம் இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதேபோல நகராட்சி ஊழியர்கள் குப்பைகளை தரம் பிரிக்காமல் அப்படியே கொட்டுவதால் வாழைஇலை மற்றும் வீணாகிப் போன உணவுகள் குப்பையில் இருப்பதால் அப்பகுதியில் உள்ள மாடுகள் தீவனத்திற்காக இங்கு வருவது வழக்கம். அதேநேரத்தில் நகராட்சியி ஊழியர்கள் குப்பை மேடுகளை அழிப்பதற்காக குப்பைகளை கொளுத்தி விடுகிறார்கள். இதனால் இந்த இடம் புகை மண்டலமாக காணப்படுகிறது.

இந்நிலையில் வழக்கம் போல நேற்று மாடுகள் தீவனத்திற்காக சுடுகாட்டில் உள்ள குப்பை மேட்டிற்கு வந்து உள்ளது. அப்போது குப்பைகளை எரித்ததால் ஏற்பட்ட புகை வெளியேறிக்கொண்டிருந்தது. அப்போது தீவனத்துக்காக சென்ற பசு மாடு திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டது. புகையினால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த வாரமும் இதே இடத்தில் சினை பசுமாடு ஒன்று இறந்துள்ளது. நேற்று இறந்த பசு மாடு கன்று போட்டு 20 நாட்கள் மட்டுமே ஆகிறது. இதனால் தாய்பசுவை காணாமல் அந்த கன்றுக்குட்டி தவிக்கிறது. இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள குப்பை தரம் பிரிக்கும் ஆலை உள்ளது.

ஆனால் நகராட்சினர் குப்பைகளை தரம் பிரிக்கும் ஆலைக்கு கொண்டு செல்லாமல் சுடுகாட்டில் குப்பைகளை கொட்டி கொளுத்தி விடுகிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. மேலும் இந்த புகையினால் பறவைகள், விலங்குகளும் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிடம் பலமுறை புகார் அளித்த போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நகராட்சி ஊழியர்கள் சுடுகாட்டில் குப்பைகளை சுடுகாட்டில் கொட்டாமல் தரம் பிரிக்கும் ஆலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>