×

சீனாவுடன் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் தியாகத்துக்கு தலை வணங்குகிறேன்; ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

டெல்லி: கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் வீர மரணம் அடைந்த இந்திய வீரர்களின் உயர்ந்த தியாகத்திற்கு தலை வணங்குகிறேன் என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார். லடாக் எல்லையில் நேற்று முன்தினம் இரவு முதல் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் மூண்டது. இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஆயுதங்கள் இல்லாத சண்டை இரு தரப்புக்கும் இடையே நடந்துள்ளது.

குறிப்பாக கைகளை வைத்தும் கற்களை வைத்தும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் சண்டை போட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து துப்பாக்கிசூடு நடத்தியதில் இருநாடுகளுக்கும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன ராணுவ வீரர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதில், லடாக் எல்லையில் சீனா திட்டமிட்டு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதன்பின்னர் தொடர்ச்சியாக வரும் பிரச்னைகளுக்கு சீனா தான் பொறுப்பு என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபட கூறியுள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவத்தில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் கூறியதாவது; நம்நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க, உயிர்தியாகம் செய்து வீர மரணம் அடைந்த தளபதி, ராணுவ வீரர்களின் உயிர்தியாகத்திற்கு தலை வணங்குகிறேன். கல்வான் பள்ளத்தாக்கில் வீரமரணம் அடைந்த அனைவரும் நம் நாட்டின் மரபு, ராணுவ வலிமையை உறுதிப்படுத்தியுள்ளனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags : Ramnath Govind ,sacrifice ,deaths ,conflict ,China , China, heroic death, sacrifice, President, Ramnath Govind
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...