×

லடாக் பகுதியில் சீனா திட்டமிட்டே தாக்குதல்...! LAC-யை கண்டிப்பாக மதிக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

டெல்லி: லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீனா திட்டமிட்டே தாக்குதல் நடத்தியுள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தகவல் அளித்துள்ளார். சீன ராணுவத்தின் செயல்பாடுதான் கொள்வான் பள்ளத்தாக்கில் அடுத்தடுத்து நடைபெற்ற மோதலுக்கு காரணமாகிறது. சீன வெளியுறவு அமைச்சர் உடனான தொலைபேசி உரையாடலில் அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்தார். லடாக் எல்லையில் நேற்று முன்தினம் இரவு முதல் இந்தியா மற்றும் சீனா இடையே மோதல் மூண்டது. இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவத்தினர் கல்லெறிந்து தாக்குதல் நடத்தியதாகவும், அதற்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஆயுதங்கள் இல்லாத சண்டை இரு தரப்புக்கும் இடையே நடந்துள்ளது.

குறிப்பாக கைகளை வைத்தும் கற்களை வைத்தும் இரு நாட்டு ராணுவ வீரர்கள் சண்டை போட்டுள்ளனர் எனக் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து துப்பாக்கிசூடு நடத்தியதில் இருநாடுகளுக்கும் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன ராணுவ வீரர்கள் பலரும் உயிரிழந்துள்ளனர். இதனால் இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதற்கிடையில் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று சீனா அறிவித்தது. அதேவேளையில் இந்திய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் ராணுவ அதிகாரிளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். பிரதமர் மோடி ‘‘இந்தியா அமைதியை விரும்புகிறது. அத்து மீறினால் தக்க பதிலடி கொடுக்கப்படும்’’என எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் சீன வெளியுறவுத்துறை மந்தரி வாங் யி உடன் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது இரு தரப்பிலும் நியாயமான முறையில் எல்லை மோதலை தீர்க்க ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதில், லடாக் எல்லையில் சீனா திட்டமிட்டு இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் இதன்பின்னர் தொடர்ச்சியாக வரும் பிரச்னைகளுக்கு சீனா தான் பொறுப்பு என்றும் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதிபட கூறியுள்ளார். மேலும், இந்த தாக்குதல் இருதரப்பு உறவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் சீனா தங்கள் தரப்பு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்து நிலைமையை சீராக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். LAC-யை கண்டிப்பாக மதிக்க வேண்டும். அதை ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை கூடாது. ஜூன் 6-ல் இருநாட்டு மூத்த தளபதிகள் பேச்சில் எட்டிய புரிந்துணர்வை உண்மையாக செயல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags : Jaishankar ,attack ,China ,Ladakh ,LAC , Ladakh, China, Attack, Foreign Minister, Jaishanger
× RELATED ஸ்ரீமுஷ்ணம் பெண் கொலை: காவல்துறை விளக்கம்