ரேஷன் அரிசியை பட்டை தீட்டி கொரோனா நிவாரண உதவியா?: இன்பதுரை உள்ளிட்ட அ.தி.மு.க-வினர் மீது அப்பாவு புகார்!

சென்னை: ரேஷன் அரிசியை பட்டை தீட்டி கொரோனா நிவாரண நிதி என்ற பெயரில் பொதுமக்களுக்கு வழங்கி முறைகேடுகளில் ஈடுபடும் அ.தி.மு.க-வினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு வலியுறுத்தியுள்ளார். ரேஷன் அரிசி கடத்தப்பட்டு, பட்டி தீட்டப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து சாத்தாங்குளம் அருகே உள்ள அரிசி ஆலையில் தூத்துக்குடி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தினர். அப்போது 420 மூட்டை ரேஷன் அரிசி கைப்பற்றப்பட்டு, அரிசி ஆலை உரிமையாளர், லாரி ஓட்டுநர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்த திமுக முன்னாள் எம்.எல்.ஏ. அப்பாவு இந்த விவகாரத்தில் தொடர்புடைய அ.தி.மு.க-வினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தார்.

அதில் ராதாபுரம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை, வள்ளியூரில் உள்ள வேளாண்மை விற்பனை கூட்டுறவு சங்க தலைவர் முருகேசன் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டுள்ள அப்பாவு, முழுமையாக விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சுமார் 500 டன்னுக்கும் அதிகமான ரேஷன் அரிசியை கடத்தி சாத்தாங்குளம் அரிசி ஆலையில் பட்டை தீட்டி, அதை 5 கிலோ கொண்ட பைகளில் அடைத்து கொரோனா நிவாரண உதவி என்ற பெயரில் அ.தி.மு.க-வினர் முறைகேடு செய்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஆட்சியரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, இந்த வகையில் தமிழகம் முழுவதும் சுமார் 1200 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

Related Stories:

>