×

வீரர்களின் தியாகம் ஒருபோதும் வீண்போகாது; அத்துமீறினால் தக்க பதிலடி: பிரதமர் மோடி எச்சரிக்கை

டெல்லி: இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை என பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்துவது தொடர்பாக 21 மாநில முதல்வர்கள், துணை நிலை ஆளுநர்களுடன் பிரதமர் மோடி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துரையாடினார். இதைத் தொடர்ந்து 2ம் கட்டமாக, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள தமிழகம் உட்பட 15 மாநில முதல்வர்களுடன் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது; கல்வான் பள்ளத்தாக்கில் சீனா நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 20 ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி; இந்திய வீரர்களின் தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது. வீரமும் தீரமும் இந்தியர்களின் பண்பு. இந்தியாவின் இறையாண்மையை விட்டுக்கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை. இந்தியா அமைதியையே விரும்புகிறது; தேவைப்பட்டால் பதிலடி கொடுக்கவும் தயங்காது. தக்க பதிலடி கொடுக்கும் வகையில் பலம் வாய்ந்த நாடாக இந்தியா உள்ளது. நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானது. இந்தியாவுக்காக உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். இந்தியாவின் உரிமையில் ஒருபோதும் சமரசம் கிடையாது.

எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் தியாகம் வீண்போகாது. எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம். பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். இந்தியர்களின் வீரத்தின் மீது நம்பிக்கை உள்ளது; சரித்திரத்திலும் நமது வீரத்தை தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறினார்.


Tags : Modi ,soldiers , Veterans sacrifice, retaliation, PM Modi
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...