×

நில உரிமைக் கோரி 18ம் நுற்றாண்டில் இருந்தே இந்தியாவுடன் சீனா மோதல் : வியட்நாம், நேபாளம், தாய்வான் நாடுகளுடனும் சீனா தகராறு!!

பெய்ஜிங் : மிகப்பெரும் நிலப்பரப்பை கொண்டு இருக்கும் நாடுகளில் ஒன்றான சீனா, தனது எல்லையை மேலும் மேலும் விரிவாக்கும் முயற்சியில் அண்டை நாடுகள் அனைத்துடனும் எல்லைப் பிரச்சனையை எழுப்பி வருகிறது. இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை தொடங்கியது இன்று நேற்றோ அல்ல, 18ம் நூற்றாண்டில் இருந்தே 2 நாடுகள் இடையே எல்லைப் பிரச்சனை புகைந்து வருகிறது.

பூசல்கள் தொடங்கிய இடம்


1834-ல் டோக்ரா இனத்தைச் சேர்ந்த குலாப் சிங் என்ற சீக்கிய மன்னர் ஜம்மு-காஷ்மீருடன் லடாக்கையும் கைப்பற்றினார். திபெத்தைக் கைப்பற்ற அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. பிறகு, பிரிட்டிஷ் படைகளுடன் நடந்த சண்டையில் அவர் தோற்றார். அவருடைய பிரதேசத்தைத் தங்களுடைய ஆட்சிப் பகுதியில் இணைத்துக்கொண்ட பிரிட்டிஷார், அவரையே தொடர்ந்து அந்தப் பகுதியை ஆண்டுவர அனுமதித்தனர். அப்போதுதான் பிரிட்டிஷ் இந்திய வடக்கு எல்லையை வகுத்தனர். பிரிட்டிஷாரின் ஆட்சிக்கு உட்பட்ட காஷ்மீரின் தெற்கு எல்லையாக பாங்காங் ஏரியை அடையாளமிட்டனர். அதற்கும் வடக்கில் காரகோரம் மலைப்பகுதி வரை தங்களுடைய எல்லை என்றனர். அதற்கும் அப்பால் உள்ள பகுதியை, ‘தங்களால் அறியப்படாத – அளக்கப்படாத பகுதி’ என்று குறிப்பிட்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை எது என்ற பூசலுக்கு இதுவே முதல் புள்ளி.

1914ம் ஆண்டு இந்தியா - சீனா - திபெத் நாடுகளுக்கு இடையே எல்லைக் கோட்டை ஏற்படுத்துவதற்கான கலந்தாய்வு கூட்டம் சிம்லாவில் நடைபெற்றது, இதில் பிரிட்டிஷ் இந்தியா சார்பாக மெக் மோகன் என அதிகாரி கலந்துக் கொண்டார். ஆனால் ஆலோசனைக் கூட்டத்தில் இருந்து சீனா வெளியேறிவிட்டதை தொடர்ந்து திபெத்தும் இந்தியாவும் தாங்களாகவே எல்லைகளை பிரித்துக் கொண்டனர். 1949ம் ஆண்டு திபெத்தில் நடைமுறையில் இருந்த நில உடமை மக்களை சுரண்டுவதாக குற்றம் சாட்டிய சீனா, மக்கள் விடுதலை பெற உதவி செய்கிறோம் என்ற போர்வையில் திபெத்தை ஆக்கிரமித்தது.

1954ம் ஆண்டில் தான் இந்தியா - சீனா இடையே ஒருவர் மற்றவரின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என்ற ஒப்பந்தம் ஏற்பட்டது. இந்த உடன் படிக்கைக்கு பிறகு, இந்தியா வெளியிட்ட வரைப்படத்தில் லடாக்கை ஒட்டியுள்ள நிலப்பரப்பான  அக்சாய் சின், இந்தியாவின் பகுதி என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு தொடங்கியது.

1959ம் ஆண்டு அடக்கு முறைக்கு குரல் எழுப்பிய திபெத் மக்களை, சீன ராணுவம் இரும்பு கரம் கொண்டு அடக்கியது, இதன் எதிரொலியாக பௌத்தமதத்தின் தலைவன் தலாய் லாமா, ஆயிரக்கணக்கான திபெத் மக்களுடன் இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். திபெத் மக்களுக்கு அடைக்கலம் அளித்ததால் இந்தியா மீதான சீனாவின் ஆத்திரம் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. இதன் விளைவு இரு நாடுகள் இடையே போராக உருவெடுத்தது.

1962 அக்டோபர் 20 இந்தியா - சீனா இடையே பெரும் போர் வெடித்தது. மெக் மோகன் எல்லைக் கோட்டை தாண்டியும் தாக்குதல் நடத்திய சீன ராணுவம், லடாக்கின் முக்கிய பகுதிகளையும் அருணாச்சல பிரதேசத்தின்
தவாங் என்ற இடத்தையும் கைப்பற்றியது. இந்த போர் ஒரு மாத காலம் நீடித்தது. 1962ல் தொடங்கி தற்போது வரை வரையப்படாத எல்லைக் கோடு தொடர்பாக இந்தியா - சீனா இடையே அவ்வப்போது பிரச்சனை வெடித்து வருகிறது.

1975ம் ஆண்டு, மீண்டும் ஒரு முறை துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. அசாம் ரைபிள்ஸ் ஜவான்கள் சீனாவின் துலுங் லா என்ற பகுதியில் துப்பாக்கி சூட்டுக்கு உள்ளாகினர். அருணாச்சல பிரதேசத்தின் எல்லை பகுதியில் உள்ள இந்த இடத்தில் நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். பின்னர் பல முறை இரு தரப்பினர் மோதிக் கொண்டபோதும் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.இந்நிலையில் லடாக்கில் கடந்த  திங்களன்று நடைபெற்ற இந்தியா - சீனா வீரர்கள் இடையேயான மோதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் 45 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா - சீனா ராணுவம் மோதலில் உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவின் மண்ணாசை எதிரொலியாக அதன் அண்டை நாடுகள் அனைத்துடனும் மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது. இந்தியா மட்டுமல்ல, ஜாப்பானின் சில தீவுகள், ரஷியா, தாய்வான், வியட்நாம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளின் எல்லை நிலப்பரப்புகளிலும் சீனா தீவிரமாக கண் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Tags : clash ,India ,China ,Taiwan ,Nepal ,Vietnam ,China Clash With India 18th Century , Land ownership, India, China, conflict, Vietnam, Nepal, Taiwan, dispute
× RELATED கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்தில்...