×

லடாக் மோதலில் ஏற்பட்ட பாதிப்பு குறித்து விளக்கம் அளிக்க மறுப்பு; இந்தியாவுடன் மேற்கொண்டு சண்டையிட விரும்பவில்லை: சீன வெளியுறவுத்துறை

பெய்ஜிங்: இந்தியா-சீன எல்லையில் பதற்றத்தை தணிக்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், லடாக் எல்லையின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் திங்கள் அன்று இரு தரப்பு படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய ராணுவம் தரப்பில் ஒரு அதிகாரி 2 வீரர்கள் என 3 பேர் உயிரிழந்துள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகின.ஆனால் இதைத் தொடர்ந்து இந்த மோதலில் படுகாயமடைந்த மேலும் 17 வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் இதனால் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாகவும் இந்திய ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

அதேபோல சீன ராணுவம் தரப்பில் 35 பேர் வரை உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் சீனா தரப்பில் இதுவரை அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிடவில்லை. இதற்கிடையே, லடாக் எல்லை ஏற்பட்ட மோதல் குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றின் தளபதிகள் மற்றும்  வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இதைத் தொடர்ந்து ராஜ்நாத் சிங், பிரதமர் மோடியை சந்தித்து விளக்கினார்.

பின்னர் மீண்டும் பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மூத்த  அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ஹூவா லிஜான், பெய்ஜிங்கில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; தூதரக ரீதியிலும், ராணுவ ரீதியிலும் சமரச முயற்சி நடைபெற்று வருகிறது. கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு சீனாவுக்குச் சொந்தமானது. சீனாவுக்கே அதில் இறையாண்மை உள்ளது. ஆனால் எல்லை ஒப்பந்தத்தை மீறி இந்திய வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதேசமயம் நிர்வாகரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் தொடர்ந்து பேச்சுவார்த்தை தொடரும்.

சரியோ, தவறோ இதைத் தெளிவாகக் கூறுகிறோம். இந்தத் தாக்குதல் சம்பவம் சீனாவின் எல்லைக்குள் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்ததால் சீனா மீது பழிபோட முடியாது. இப்போது கல்வான் பள்ளதாக்கு பகுதி நிலையாகவும் கட்டுக்கோப்பாகவும் அமைதியாக இருக்கிறது. நடந்ததில் எது சரி, எது தவறு என்பதில் சீன அரசு தெளிவாக உள்ளது. இந்தியாவுடன் மேற்கொண்டு சண்டையிட விரும்பவில்லை. எல்லை பிரச்னைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என கூறினார். அப்போது; சீனா தரப்பில் எத்தனை பேர் பலியாகியுள்ளார்கள், காயமடைந்துள்ளார்கள் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுவதாவது; சீனாதான் அத்துமீறி எல்லை கடந்து வந்து தாக்கிவிட்டு தற்போது நிலைப்பாட்டை மாற்றுகிறது. அனைத்துவிதமான நடவடிக்கைகளும் இந்திய எல்லைக்குள், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுக்குள் இருக்கிறது என்பதில் இந்தியா தெளிவாக இருக்கிறது. அதேபோல சீனா தரப்பிலும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.


Tags : Chinese Foreign Ministry ,conflict ,China ,Ladakh ,India ,Chinese , Ladakh Conflict, India, China State Department
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...