×

சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை வயலுக்குள் இறங்கி தூக்கி செல்லும் அவலம்

சீர்காழி: மயிலாடுதுறை அருகே சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி இல்லாததால் இறந்தவர் உடலை வயலுக்குள் இறங்கி தூக்கி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் மருதங்குடி ஊராட்சியில் அமைந்துள்ள ஐவேலி கிராமத்தில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் உயிரிழந்தால் 1 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள உப்பனாற்றின் கரையில் அடக்கம் செய்வது வழக்கம். இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு சாலை வசதி இல்லாததால் வயலில் இறங்கி இறந்தவரின் உடலை தூக்கி செல்லும் நிலை காலம் காலமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஐவேலி கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை எடுத்து செல்லும்போது நடவு செய்திருந்த வயலில் இறங்கி, அப்பகுதி மக்கள் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து சென்றனர். தமிழ்நாடு வளர்ச்சி பாதையை நோக்கி செல்லும் நிலையில் இறந்தவரின் உடலை எடுத்து செல்ல சாலை வசதி இல்லாமல் நடவு செய்த வயலில் இறங்கி எடுத்து சென்ற சம்பவம் அனைவரின் மனதையும் வேதனையடைய செய்துள்ளது. ஐவேலி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் இறந்தவரின் உடலை எடுத்து செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, சுடுகாட்டிற்கு செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : deceased , lack , fireworks, , deceased goes , field
× RELATED ஒசூர் அருகே யானை தாக்கி உயிரிழந்த 2...