பருவநிலை மாற்றத்தால் மாங்காய் மகசூல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

உடுமலை: திருப்பூர்  மாவட்டத்தில் ஜல்லிப்பட்டி, குறிச்சிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரங்களில்  சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மா மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு  வருகிறது. குறிப்பாக இப்பகுதிகளில் விளைவிக்கப்படுகின்ற  செந்தூரம், நீலம், மல்கோவா, பங்கனபள்ளி உள்ளிட்ட உயர்ரக, ஒட்டுரக மாம்பழங்கள்  சுவை மிகுந்தவையாக இருக்கும். ஆண்டுக்கு ஒரு முறையே மகசூல் தரக்கூடிய  இவ்வகை மாம்பழங்கள் பருவநிலை மாற்றம் காரணமாக மகசூல் குறைந்ததால்  விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  இதுகுறித்து ஜல்லிப்பட்டி விவசாயி  கூறுகையில், ‘‘ஆண்டுக்கு 4 முறை உழவு ஓட்டவும், உரம் வைக்கவும் ஏக்கருக்கு  ரூ.20 ஆயிரம் வரை செலவாகிறது. ஒரு ஏக்கருக்கு 50 முதல் 60 கன்றுகளை நட்டு  அவற்றை 5 வருடங்கள் பராமரித்தால் மட்டுமே மகசூல் கிட்டும்.

தற்போது பருவநிலை  மாற்றத்தால் மாமரங்களில் பூக்கள் அதிகளவில் உதிர்ந்தன. இதனால்  காய்பிடிப்பு குறைந்தது. நீலம், பங்கனபள்ளி உள்ளிட்ட மாம்பழம் ஒன்று 500  கிராம் முதல் 600 கிராம் வரை எடை கொண்டதாக இருக்கும். ஆனால் பூக்களை பூச்சி  அரித்து விடுவதால் மாங்காய்கள் நன்றாக விளைச்சல் அடையாமல் 100 கிராம், 150  கிராம், 200 கிராம் எடை கொண்டதாக சிறுத்து விடுகிறது.ஏக்கருக்கு 300  கிேலா முதல் 500 கிலோ வரை மகசூல் கிடைத்த சூழ்நிலை மாறி, தண்ணீர்  பற்றாக்குறை, பருவமழை பிந்தியது, காற்று உள்ளிட்ட சீதோஷ்ண நிலை அடிக்கடி  மாறியதால் மாமரங்களில் சரிவர காய் பிடிக்கவில்லை. ஒரு சில மரங்களை  தவிர்த்து பெரும்பாலான மரங்களில் காய்கள் எடைக்குறைவாகவே உள்ளது. இவற்றை  சந்தைக்கு எடுத்து சென்றால் வியாபாரிகள் வாங்க மறுக்கின்றனர். தோட்டம்  பராமரிப்பு, பறிக்கும் கூலிக்கு கூட மாம்பழங்கள் விற்பனையாவதில்லை.

கொரோனா  ஊரடங்கால் பழனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  வியாபாரிகள் வருவதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையோரம் இருந்து  காட்டுப்பன்றிகள் தொந்தரவு அதிகரித்துள்ளதால் விளைச்சல் ெவகுவாக  பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மா பயிரிட்டுள்ள விவசாயிகள்  ஏக்கருக்கு 1200 ரூபாய் காப்பீடு செய்த போதும் இதுவரை ஒருமுறை கூட  இழப்பீட்டுக்குரிய நிவாரணம் கிடைக்கவில்லை.ஆண்டுக்கு ஏக்கர் ஒன்றுக்கு  ரூ.20 ஆயிரம் என்ற வகையில் பத்து ஆண்டுகள் தோட்டத்தை பராமரித்த வகையில் ஒரு  ஏக்கருக்கு ரூ.2 லட்சம் செலவிட்டும் முதலுக்கே மோசம் என்ற நிலை தான்  தொடர்கிறது,’’ என்றார்.

Related Stories:

>