×

பழநியில் சீரமைப்பு பணியால் சிசிடிவிக்கள் சேதம்: சரிசெய்து தராததால் போலீசார் புலம்பல்

பழநி: கோயில் நகரான பழநியை மேம்படுத்தும் வகையில் ரூ.58 கோடியில் பல்வேறு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சாலையோரங்களில் வடிகால் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் ஆங்காங்கே பொக்லைன், ஜேசிபி போன்ற இயந்திரங்கள் முலம் குழிகள் தோண்டப்பட்டு வருகின்றன. இதனால் நகர் முழுவதும் சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களின் வயர்கள் துண்டிக்கப்பட்டு விட்டன. இதில் போலீசாரால் கண்காணிப்பதற்காக பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமிராக்களில் 80க்கும் மேற்பட்டவை பழுதாகி உள்ளது. இதனால் குற்ற சம்பங்கள் நடந்தால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டு விடுமென போலீசார் புலம்பி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது, ‘பழநி நகரில் செயின் பறிப்பு உள்ளிட்ட திருட்டு சம்பவங்கள் அதிகளவு நடந்து வந்தது. குற்றவாளிகளை அடையாளம் காணுவதற்கு வசதியாக நகர் முழுவதும் முக்கிய சாலைகள், தெருக்களில் 120க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை கண்காணிக்கும் வசதி நகர் காவல் நிலையத்தில் உள்ளது. தற்போது சாலை சீரமைப்பு பணிக்காக குழிகள் தோண்டும் போது சிசிடிவி கேமிராக்களின் தூண்கள், வயர்கள் பல இடங்களில் பெயர்க்கப்பட்டு விட்டன. இதனால் 80க்கும் மேற்பட்ட கேமிராக்கள் செயல்படாமல் உள்ளது. சாலை சீரமைப்பு பணியில் ஈடுபடும் ஒப்பந்ததாரர் ஆளும்கட்சியை சேர்ந்த அரசியல் பின்புலம் உள்ளவர் என்பதால் அதனை சரிசெய்து தராமல் இழுத்தடித்து வருகிறார். இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் போகும் வாய்ப்புள்ளது’ என்றனர்.

Tags : Damage,CCDVs , antiquity work, Police lament,lack of repair
× RELATED தமிழ்நாட்டில் புதிதாக 2 லட்சம் ரேஷன்...