×

திருப்போரூர் ஒன்றியத்தில் பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்வு: கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் குழு

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. இதையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள  அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னையை ஒட்டிய புறநகர் பகுதியான திருப்போரூர் ஒன்றியத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. மொத்தமுள்ள 50 ஊராட்சிகளில் 17 ஊராட்சிகளில் கொரோனாவால், பாதிக்கப்பட்டோர் அதிகளவில் உள்ளனர். இதில் மேலக்கோட்டையூர் ஊராட்சியில் மட்டும் 28 பேர், கோவளம், படூர், தாழம்பூர், மானாம்பதி ஆகிய ஊராட்சிகளில் தலா 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையொட்டி, திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள 2 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போது பாதிப்பு அதிகரித்துள்ளதால், 17 ஊராட்சிகள் இரண்டாக பிரிக்கப்பட்டு அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி கோவளம், மேலக்கோட்டையூர், மாம்பாக்கம், பையனூர், புதுப்பாக்கம், பொன்மார், படூர், தாழம்பூர், சோனலூர் ஆகிய 9 ஊராட்சி களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் அலுவலர்கள் அரிகிருஷ்ணன், அன்பழகன், பாஸ்கரன், மணிவண்ணன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று ஆலத்தூர், கரும்பாக்கம், நாவலூர், தையூர், முட்டுக்காடு, நெல்லிக் குப்பம், கேளம்பாக்கம், மானாம்பதி ஆகிய 8 ஊராட்சிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கட்ராகவன் தலைமையில் அலுவலர்கள் கனிமொழி, கோபு, ராஜசேகரன், சங்கர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு கொரோனா பாதிப்பு பகுதிகளை கண்டறிந்து விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வதோடு, கொரோனா பரவாமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை திருப்போரூர் ஒன்றியத்தில் மேற்கண்ட 17 ஊராட்சிகளில் மட்டும் 74 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : Thirupporeur Union, Corona, Committee of Officers
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...