×

12 நாட்கள் முழு ஊரடங்கு எதிரொலி சென்னை வங்கிகளில் கூட்டம் குவிந்தது: பணம் எடுக்க வரிசையில் காத்திருப்பு

* காய்கறி, மளிகை கடைகளும் நிரம்பி வழிந்தன

சென்னை: முழு ஊரடங்கு எதிரொலியாக காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க நேற்று காலை சென்னையில் கூட்டம் அலைமோதியது. அதேபோல வங்கிகளில் பணம் எடுக்க மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காட்சியை காண முடிந்தது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அறிவித்தார்.

முழு ஊரடங்கு நேரத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை பொருட்கள் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வங்கிகள் 10 நாட்கள் செயல்படாது. வருகிற 29, 30 ஆகிய 2 நாட்கள் மட்டுமே வங்கிகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதுவும் குறைந்த ஊழியர்களுடன் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதையடுத்து நேற்று காலை முதல் மக்கள் காய்கறி, மளிகை பொருட்களை வாங்க கடைகளின் முன் திரண்டனர். மளிகை கடைகள் முன்பு காலை 6 மணி முதலே மக்கள் நீண்ட வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்றனர். இதேபோல காய்கறி கடைகளில் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது.

அதேபோல, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த காய்கறி கடைகளிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்தவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையிலும் போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர். சூப்பர் மார்க்கெட்டில் கைகளில் சானிடைசர் மற்றும் காய்ச்சல் பரிசோதனைக்கு பின்னரே பொருட்களை வாங்க வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மொத்தமாக மக்கள் பொருட்களை வாங்கி சென்றனர்.மேலும் வங்கிகள் 10 நாட்களுக்கு விடுமுறையால் வாடிக்கையாளர்கள் அத்தியாவசிய தேவைக்கு பணத்தை எடுக்க வங்கிகளின் முன்பாக நேற்று காலை முதல் திரண்டிருந்த காட்சியை காணமுடிந்தது. காலை 10 மணிக்கு தான் வங்கிகள் திறக்கப்படும். ஆனால், சென்னையில் ஒவ்வொரு வங்கி முன்பாகவும் காலை 8 முதலே பொதுமக்கள் வரிசையில் நின்ற காட்சியை காண முடிந்தது.

வங்கிகள் காலை 10 மணிக்கு திறந்ததும் ஒவ்வொருவராக வங்கிகளுக்கு பணம் எடுக்க, டெபாசிட் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பெரும்பாலான வங்கிகளின் நுழைவாயில் பூட்டப்பட்டு ஒவ்வொருவராக அனுமதிக்கப்பட்டனர். வங்கிகளுக்கு சென்றவர் திரும்பி வந்த பின்னரே மற்றவர்கள் வங்கிகளுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர்.  வங்கிகளின் முன்பாக கூட்டம் அதிகமானதை தொடர்ந்து கூட்டத்ைத ஒழுங்குப்படுத்தும் வகையில், போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர். நேற்று கூட்டம் அதிகரித்த நிலையில் இன்றும், நாளையும் வங்கி, மளிகை கடைகள், காய்கறி கடைகளில் இன்னும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதேநிலை தான் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் காணப்பட்டது.

டாஸ்மாக்கில் குவிந்த குடிமகன்கள்
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இதனால், இந்த 4 மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் 30ம் தேதி வரை 12 நாட்கள் முழுமையான ஊரடங்கு உத்தரவு பின்பற்ற தமிழக அரசு உத்தரவிட்டது.
ஊரடங்கு தளர்வில் மற்ற பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறந்தாலும் சென்னையில் இன்னும் மதுக்கடைகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில், மாமல்லபுரத்தில் 2 வாரம் மதுக்கடைகள் மூடப்பட்டால், தங்களுக்கு மது கிடைக்காமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் நேற்று மாமல்லபுரத்தில் உள்ள வெளிநாட்டு மதுக்கடையில் சென்னை குடிமகன்கள் கார்களில் வந்து பெட்டி, பெட்டியாக பல்வேறு வகை மதுபாட்டில்களை வாங்கிச்சென்றனர்.



Tags : Chennai ,crowd ,banks , Full Curfew, Chennai, Banks Vegetable, Grocery Stores
× RELATED ஃபோர்டு நிறுவனம் சென்னையில் தனது...