×

பணியாளர்கள் சங்க தலைவருக்கு கொரோனா தாக்குதல் எதிரொலி ஊழியர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு முக்கியம்: பதிவுத்துறை ஐஜி வேண்டுகோள்

சென்னை: பத்திரப்பதிவுத்துறையில் ஊழியர்கள் சங்கத் தலைவர் மற்றும் எழுத்தர்களுக்கு கொரோனா பரவியதைத் தொடர்ந்து, அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளையும் தவறாது பின்பற்ற வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்குக்கு பிறகு  தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. அத்தியாவசியப் பணிகளுக்கான சட்டத்தில் பத்திரப்பதிவுத்துறை வரவில்லை. ஆனாலும், அந்த துறையின் தலைவராக உள்ள ஜோதி நிர்மலாசாமி, அனைத்து ஊழியர்களும் பணிக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். அதைத் தொடர்ந்து ஊழியர்கள் அச்சத்துடனும், பீதியுடனும் வேலைக்கு வந்தனர்.இந்நிலையில், காஞ்சிபுரம் மற்றும் ஆரணியைச் சேர்ந்த பத்திர எழுத்தர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத் தலைவர் வீரக்குமாருக்கு கொரோனா தொற்று இருந்தது நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அடையாறில் உள்ள பதிவு அலுவலகத்தில் உதவி பதிவாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கொரோனா பரவியதையடுத்து அதிகாரிகள் பீதியடைந்துள்ளனர்.

மேலும், தற்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவிப்பில், அத்தியாவசியப் பணிகளில் பதிவுத்துறையை குறிப்பிடவில்லை. ஆனால் பதிவுத்துறை தலைவர், ஊழியர்கள் பணிக்கு வரவேண்டுமா? இல்லையா? என்பது குறித்து எந்த அறிவிப்பையும் செய்யவில்லை. இதனால் இந்த முழு ஊரடங்கு நேரத்தில் என்ன செய்வது என்று ஊழியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.   
இந்த நிலையில் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று பதிவுத்துறை ஐஜி ஜோதி நிர்மலாசாமி அனைத்து சார்பதிவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:சார்பதிவாளர் அலுவலகங்களில் வைரஸ் தொற்று பரவாத வகையில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல்களுக்கு இணங்க அனைவரும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும். தங்களின் தனிப்பட்ட பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியம். எனவே தொற்று பரவுவதில் இருந்து காத்துக்கொள்ளும் வண்ணம் அனைத்து பாதுகாப்பான நெறிமுறைகளையும் தவறாது பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். அதேபோன்று சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு பத்திரப்பதிவுக்காக வரும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வது நமது கடமையாகும்.

எனவே பதிவுக்கு வரும் பொதுமக்கள் முக கவசம் அணிவதையும் பதிவுக்கு முன்பாக கைகளை சானிடைசர் கொண்டு சுத்தப்படுத்துவதையும் தனிமனித இடைவெளி கடைப்பிடிப்பதையும், விரல் ரேகை பதிவு செய்வதற்கு முன்பாக பதிவு கருவிகளை சானிடைசர் கொண்டு துடைப்பதையும் தவறாது உறுதி செய்ய வேண்டும். நமது குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போல பத்திரப் பதிவுக்கு வரும் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். தங்களின் பாதுகாப்பும் பதிவுக்கு வரும் பொதுமக்களின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்பதை மனதில் கொண்டு பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : request ,Corona ,staff union leader ,attack ,IG , Coronation attack, staff, public safety ,important for Staff Union leader, IG request
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...