×

பாசம் மறந்த பிள்ளைகளால் தெருவில் தவிக்கும் பெற்றோர்: உயிர் அடங்கும் முன்பே கல்லறை வாசம் ஆதரவுக்கு யாருமின்றி அல்லாடுது சுவாசம்

* கொரோனாவை காரணம் காட்டி விரட்டிவிடும் கொடூரம்

சென்னை: மரணிக்கும் வயதல்ல... ஆனால், மயானத்தில் வாசம். சாதாரணமாக மனிதர்கள் வர அஞ்சும் மயானத்தில், 55 வயது பெண்மணி விஜயாவை பார்த்து பதறாதவர்களே இல்லை. கொரோனா ஊரடங்குக்கு முன்பு யாரோ சிலரால் அவருக்கு கிடைத்து வந்த உணவு, ஊரடங்கால் நின்று போய்விட்டது. ஆனாலும், கோவை சுண்டக்காமுத்தூர் மயானத்தில் பசி அடங்காமல் பரிதவித்த அவரை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் மீட்டு, ஒரு பெண் உதவியுடன் குளிக்க வைத்தனர். அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதிப்படுத்திய பிறகு, மாநகராட்சி விடுதியில் தங்க வைத்தனர்.

இது, தமிழகத்தின் ஏதோ ஒரு ஊரில் மட்டுமே நடந்த சம்பவம் அல்ல. பரபரப்பான நகரிலும், ஊர்களின் ஒதுக்குப்புறம், மரத்தடிகளிலும், மண்டபங்கள், கோயில்களுக்கு வெளியிலும் அழுக்கு உடையுடன் அரற்றியபடி சுற்றும் முதியவர்களை இன்னும் காண முடியும். பணத்தை மட்டுமே பிரதானமாக நம்பிய, மனசாட்சியற்ற பிள்ளைகளாலும், உறவினர்களாலும் நேர்ந்த கொடூரம். குழந்தைகள் நாளை நம்மை காப்பாற்றுவார்கள்் என எதிர்பார்த்து எந்த பெற்றோரும் பிள்ளைகளை வளர்ப்பதில்லை. உயிரை உருவாக்கி ரத்தமும் சதையும் தந்தவர்கள். வாழ்க்கையில் அவர்கள் இழந்ததை எல்லாம் குழந்தைகள் அனுபவிப்பதை பார்த்து குதூகலிப்பவர்கள் அவர்கள். ஆனால் நடக்கவும், படிக்கவும், கற்றுக்கொடுத்து வாழ்க்கையில் உயர்ந்ததை பார்த்து உச்சி முகர்ந்த பெற்றோர் பலர், இன்று தெருக்களில் உறவுகள் இருந்தும் அனாதைகளாக அல்லாடுகின்றனர்.

தனக்கென வாழ்க்கை அமைந்ததும், வளர்த்த ஏணியை எட்டி உதைப்பது போல தெருவில் விட்டு விடுகின்றனர். இப்படி கைவிடப்பட்ட முதியவர்கள் பலர் சாலை ஓரங்களில் உணவின்றி தவித்து வருகின்றனர். சிலர் கொடுக்கும் உணவை சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகின்றனர். வசதி உள்ள சிலர், முதியோர் காப்பகங்களில் சேர்த்து விடுகின்றனர். எவ்வளவோ விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் நகர்ப்புறங்களில் முதியோர் இல்லத்தில் சேர்ப்பது குறைந்தபாடில்லை. இப்படி நிலைமை இருக்கும் நேரத்தில் முதியோருக்கு கொரோனாவால் மேலும் பேராபத்து ஏற்பட தொடங்கியுள்ளது.
கொரோனா முதியவர்களை, அதாவது, 60 வயதை கடந்தவர்களை தான் அதிகமாக தாக்கும் என்று ெசான்னாலும், சொன்னார்கள்..

இதையே பலர் சாக்காக கருதி வயதான பெற்றோரை வெறுப்பது அரங்கேறியுள்ளது. வீட்டில் உள்ள வயதான பெற்றோருக்கு கொரோனா தாக்கி விட்டால் எங்ேக வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு பரவி விடுமோ? நமக்கு வந்து விடுமோ என்று நினைக்க தொடங்கியுள்ளனர். நோய் வந்தால் எங்கே குடும்பத்தை தனிமைப்படுத்தி விடுவார்களோ?. முதியோருக்கு கொரோனாவால் பாதிப்பு ஏற்பட்டால் எங்கே தங்கியிருக்கும் வீட்டை காலி செய்ய சொல்லி விடுவார்களோ என்ற பயமும் தொற்றி கொண்டுள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில், முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விடுவதாக? தகவல் வெளியாகியுள்ளது. இதனால், முதியோர் இல்லத்தில் கொரோனா காலத்தில் அதிக அளவிலான முதியோர் சேர்ந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.மருத்துவ சாதனைகள் வானளாவ உயர்ந்து நிற்கின்றன.

அல்ப ஆயுளில் போக வேண்டிய உயிர்கள், முக்கால் நூற்றாண்டு கடந்தும் மூச்சு விட்டுக் கொண்டிருக்கின்றன. எதையோ மறுப்பதுபோல் அவர்களின் தலை ஆடிக்கொண்டிருக்கின்றன. அந்த மறுப்பு வாழ்வையா மரணத்தையா என்பதை அவர்களின் மனம் மட்டுமே அறியும். இந்த துன்பத்தில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று அந்த உயிர்கள் துடிப்பதை அவர்களால் வளர்க்கப்பட்ட, வாழ்த்தப்பட்ட வாரிசுகளும், உறவினர்களும் உணராதவரை, இது அவர்களுக்கு சுவாசமல்ல.... கல்லறை வாசம்தான்.

சென்னை 2வது இடம்
இந்தியாவில் மொத்த முதியோர் எண்ணிக்கையில், 1.2 கோடி முதியோர்களை கொண்ட உத்தரபிரதேசம் முதல் இடத்திலும், 86 லட்சம் முதியோர்களை கொண்ட மகராஷ்டிரா 2-வது இடத்திலும், 60 லட்சம் முதியோர்களை கொண்டு  தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. பெரு நகரங்களில் 8 சதவீதத்துடன் சென்னை 2வது இடத்திலும், கொல்கத்தா 10 சதவீதத்துடன் முதல் இடத்தில் உள்ளது. தனியார் முதியோர் நல அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில், ‘உழைக்கும் திறன் குன்றி, வருவாய் இல்லாமல், நோய்வாய்பட்ட முதியோர்களே அதிகளவில் 70 சதவீதம் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

20 சதவீத முதியவர்கள், உளவியல் பிரச்னைகளாலும், 5 சதவீதம் பேர் ரத்த சம்பந்தமான உறவுகள் இல்லாததாலும், 5 சதவீதம் பேர், ெகாடிய நோய் பாதிப்புகளாலும் வீட்டை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள்.60 வயதைக் கடந்த முதியோர் அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 2050ம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் முதியோர் 20 சதவீதம் பேர் இருப்பார்கள்” என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் 300 இல்லங்கள்
தமிழகத்தை பொறுத்தவரைக்கும் புறக்கணிக்கப்படும் முதியவர்களுக்காக 300க்கும் மேற்பட்ட முதியோர் இல்லம் செயல்படுகிறது.இதில் சில இல்லங்கள் கட்டண அடிப்படையில் செயல்படுகின்றன. சென்னையில் மட்டும் 180 இல்லங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இங்கு ஒவ்வொரு இல்லங்களிலும் குறைந்த பட்சம் 10 பேர் முதல் அதிகப்பட்சம் 30 பேர் உள்ளனர்.23 மாவட்டங்களில் முதியோர் இல்லங்களை நடத்துவதற்கு 25 அரசு சாரா நிறுவனங்களுக்கு மாநில அரசு மானியங்கள் வழங்குகின்றது. ஒவ்வொரு வீட்டிலும் 40 பேரைபராமரிக்க ஆண்டுக்கு 2 லட்சம் மானியமாக வழங்குகிறது. இதில் 845 பேர் பயனடைகின்றனர்.

Tags : children ,Parents ,street , Corona, curfew
× RELATED 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளி கொன்று...