×

கிராம உதவியாளர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம்: ஐகோர்ட் உத்தரவு

மதுரை: கிராம உதவியாளர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்ட ஐகோர்ட் கிளை, இக்கோரிக்கையை மறுத்த அரசின் இடைக்கால உத்தரவுகளை ரத்து செய்தது. தமிழகத்தில் தலையாரி, வெட்டியான் போன்ற கிராம அடிப்படை ஊழியர்கள், தொகுப்பூதியத்தில் நீண்ட காலமாக பணிபுரிந்து வந்தனர். இவர்கள் கடந்த 1.6.1995ல் கிராம உதவியாளர்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். இவர்கள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து மொத்த பணிக்காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ேடார் அரசிடம் மனு அளித்தனர். இந்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, தஞ்சை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தலையாரிகள், தங்களின் கோரிக்கையை நிராகரித்து பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்தும், தங்கள் முழுப்பணிக்காலத்தையும் ஓய்வூதியத்திற்கு கணக்கிட உத்தரவிடக்கோரியும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் அனைத்தையும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். மனுதாரர்கள்  வக்கீல் விஸ்வலிங்கம், ‘‘தலையாரிகளுக்கு பணியில் சேர்ந்த நாளிலிருந்து பணிக்காலத்தை கணக்கிட்டு ஓய்வூதியம் வழங்கக்கோரி ஐகோர்ட், நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகளில் உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் அரசு அந்த உத்தரவுகளை செயல்படுத்த மறுக்கிறது’’ என்றார். இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர்களின் கோரிக்கையை நிராகரித்து பிறப்பிக்கப்பட்ட அனைத்து இடைக்கால உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர்கள் பணியில் சேர்ந்த நாளிலிருந்து 31.5.1995 வரையிலான பணிக்காலத்தில் 50 சதவீத பணிக்காலத்தையும், பணி நிரந்தரம் செய்யப்பட்டதில் இருந்து ஓய்வு வரையிலான பணிக்காலத்தையும் சேர்த்து ஓய்வூதிய கணக்கிற்கு எடுத்துக்கொள்ள வேண்டும். இதனடிப்படையில் மனுதாரர்களின் திருத்தப்பட்ட ஓய்வூதிய பரிந்துரைகளை 8 வாரத்தில் வருவாய்த்துறை முதன்மை செயலர் தலைமை கணக்காயருக்கு அனுப்ப வேண்டும். அந்த திருத்தப்பட்ட ஓய்வூதிய பரிந்துரை அடிப்படையில் தலைமை கணக்காயர் 4 வாரத்தில் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தனது உத்தரவில் கூறியுள்ளார்.

Tags : Village Assistants , Revised Pension , Village Assistants, ICORT Directive
× RELATED புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய...