×

வேலூரில் அதிர்ச்சி சம்பவம் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி பல பெண்களிடம் பணம் பறித்த கும்பல்: தீக்குளித்த சிறுமி பரபரப்பு வாக்குமூலம்

வேலூர்: வேலூரில் 15 வயது சிறுமி தீக்குளித்த விவகாரத்தில் நடந்து வரும் போலீஸ் விசாரணையில், இளம்பெண்கள் குளிப்பதை படம் பிடித்து இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி பல பெண்களிடம் பணம் பறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலூர் பாகாயம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. கடந்த 12ம் தேதி வீட்டில் இருந்த மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பாகாயம் போலீசார் விசாரணை நடத்தி கணபதி(18), பென்னாத்தூரை சேர்ந்த ஆகாஷ்(20) மற்றும் சிறுமியின் வீட்டின் அருகே வசிக்கும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்களில் சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளான்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இணையதளத்தில் வெளியிடுவதாக மிரட்டி கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். சிறுமி தீக்குளித்த தினத்தன்று அருகிலுள்ள மறைவான இடத்துக்கு சிறுமியை வரவழைத்து ₹5 ஆயிரம் கொடுத்தால் வீடியோவை அழிப்பதாக மிரட்டியுள்ளனர். இதற்கிடையில் 13ம் தேதி வேலூர் ஜேஎம் மாஜிஸ்திரேட் இருதயமாரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றார். அதை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளனர். சிறுமி வாக்குமூலத்தில் கூறியதாவது: நான் 10ம் வகுப்புக்கு சென்ற சில நாட்களிலேயே அவர்களது தொல்லை ஆரம்பித்துவிட்டது. எங்கள் வீட்டு மொபைல் போனுக்கு நான் குளிக்கும் காட்சியை வீடியோ பிடித்து அனுப்பிவிட்டு போன் செய்தார்கள். நான் போனில் பேசினேன். அப்போது முதல் வேலூர் கோட்டைக்கு வா, அருகில் உள்ள மலையடிவாரத்துக்கு வா என்று மிரட்ட தொடங்கினர். ₹5 ஆயிரம் கொடுத்தால் வீடியோவை அழித்துவிடுகிறோம் என்று கூறினர். இதனால் வீட்டில் பணம் கேட்டேன். அப்போது, எதற்காக பணம் என்று கேட்டனர். எனக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தேன்.

உடனே, என்னுடைய சித்தியும், சித்தப்பாவும் அந்த பசங்கள அழைத்து மிரட்டினர். ஆனால், பணம் தராவிட்டால் வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டினர். அவர்கள் மொபைல் போனில் நான் மட்டுமின்றி, என்னை போன்று நிறைய பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து வைத்திருந்தனர். இதேபோல் பல பெண்களை மிரட்டி பணம் பறித்துள்ளனர். என்னுடைய வீடியோ இண்டர்நெட்டில்  வந்தால் என்னை எல்லோரும் கிண்டல் செய்வார்கள் என்று பயந்து தீக்குளித்தேன்.இவ்வாறு சிறுமி வாக்குமூலம் அளித்தார். சிறுமியின் வாக்குமூலத்தின்படி, தற்கொலைக்கு தூண்டியது, போக்சோ உட்பட 5 பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்தனர். 3 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனில் 34 ஆபாச வீடியோக்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : incident ,Vellore , Video, Shocking incident , Vellore
× RELATED புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல்...