×

கொரோனாவை விரட்ட டெக்சாமெதசோன் மருந்து: இங்கிலாந்து ஆய்வில் மகிழ்ச்சியான தகவல்

ஆக்ஸ்போர்டு: கொரோனா தொற்றில் இருந்து உயிர் பிழைக்கலாம் என்பதை டெக்சாமெதசோன் என்ற மருந்தை பரிசோதித்ததில் முதல் முறையாக நிருபிக்கப்பட்டு உள்ளதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்க, உலகில் பல்வேறு நாடுகளின் மருத்துவர்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளன. இந்நிலையில், பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை உள்ளிட்ட தனிநபர் நன்கொடையாளர்கள், இங்கிலாந்து சுகாதாரத் துறைக்கு அளித்த நிதி உதவியின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் கொரோனாவில் இருந்து தப்பி உயிர் பிழைக்க டெக்சாமெதசோன் மருந்து உதவும் என முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 11,000க்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு கொடுக்கப்பட்ட மலேரியா தடுப்பு மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயின், கொரோனாவுக்கு எதிராக செயல்படவில்லை என்று ஆய்வு ஒன்றில் கூறப்பட்டது. எச்ஐவி.வுக்கு வழங்கப்படும் லோபினவிர்-ரிடோனவிர், ஆன்டி பயோடிக் அசித்ரோமைசின், ஸ்டீராய்டு டெக்சாமெதசோன், அழற்சி எதிர்ப்பு மருந்துகளான டோசிலிஜுமாப், குணமடைந்தவர்களிடம் இருந்து பெறப்பட்ட பிளாஸ்மா ஆகியவை கொரோனாவுக்கு எதிரான எதிர்ப்பு செல்களை உருவாக்குகின்றன. இந்த மருந்து வாய் வழியாகவோ அல்லது நரம்பு மூலமாகவோ உட்செலுத்தப்பட்டது. இதன் மூலம், சுவாசக் கருவியின் உதவியுடன் இருந்த நோயாளிகளின் இறப்பு விகிதம் 35 சதவீதம் குறைந்தது.

ஆக்சிஜன் உதவியுடன் இருந்த நோயாளிகளில் இறப்பு விகிதம் 20 சதவீதம் குறைந்தது. வழக்கமான சிகிச்சை பெறும் 4,321 நோயாளிகளுடன் இந்த மருந்து எடுத்து கொண்ட 2,104 நோயாளிகளுடன் ஒப்பிட்ட போது, அவர்களில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இந்த ஆய்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உள்ள ஆய்வு குழு ஒன்றின் தலைவர் பீட்டர் ஹார்பி கூறுகையில், `` ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெறும் நோயாளிகள் குணமடைந்து வாழ்வதற்கான வாய்ப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த நோயாளிகளுக்கான சிறப்பு மருந்தாக டெக்சாமெதசோன் உருவாகி உள்ளது. டெக்சாமெதசோன் விலை குறைவான மருந்து ஆகும். உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் உயிர்கள் இனி பிழைத்து கொள்ளும்’’ என கூறினார்.

Tags : UK , Dexamethasone medication , drive coronavirus,happy study , UK study
× RELATED பிரான்சில் இருந்து கடல் வழியாக...