×

கொரோனா பீதி காரணமாக சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஓட்டம் பிடிக்கும் மக்கள்: செங்கல்பட்டில் தடுத்து நிறுத்தும் போலீசார்

சென்னை: கொரோனா பீதியில் சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு ஓட்டம் பிடிக்கும் பொதுமக்களை, செங்கல்பட்டு சுங்கசாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி, திருப்பி அனுப்பினர். இதனால் கை குழந்தை, பெண் குழந்தைகளுடன் செல்லும் பொதுமக்கள் இந்த ஊரடங்கில் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தவித்து வருகிறோம். சொந்த ஊருக்கு அனுப்பினால் கஞ்சி, கூழ் குடித்தாவது நிம்மதியாக இருப்போம் என்று வேதனை தெரிவித்தனர். கொரோனா பரவல் தீவிரம் காரணமாக சென்னை மற்றும் புறநகரை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு மூட்டை முடிச்சுகளுடன் பைக், கார், லாரி, ஆட்டோக்களில் தங்களது வீடுகளை காலிசெய்துவிட்டு புறப்பட்டுள்ளனர். தென் மாவட்டங்களுக்கு திருச்சி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களை நோக்கி கடந்த 4 நாட்களாக  சென்ற வண்ணம் உள்ளனர். அவர்களை செங்கல்பட்டு சுங்கசாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி, முறையான பாஸ் உள்ளவர்களை மட்டும் அனுமதித்து, மற்றவர்களை திருப்பி அனுப்புகின்றனர். போலீசாரின் இந்த சோதனையில், உரிய ஆவணம், இ பாஸ் இல்லாமல் பயணம் செய்ததாக 400க்கும் பைக்குகள், கார், ஆட்டோக்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், சென்னையிலும் செங்கல்பட்டு புறநகர் பகுதியிலும் நாளுக்குநாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஏற்கனவே ஊரடங்கில் வேலை இல்லாமல், சாப்பிட உணவு இல்லாமல் தத்தளித்தோம். சென்னை போன்ற நகரங்களில் உள்ள சிறு அறைகளில் மனைவி, குழந்தைகளுடன் ஒருவர் முகத்தை ஒருவர் எத்தனை நாள் பார்ப்பது. வேலையும் இல்லை. வெளியே போக போலீசும் விடுவதில்லை. எப்போது கடையை மூடச்சொல்வார்கள், எப்போது திறக்கச் சொல்வார்கள் என்ற நிச்சயமற்ற நிலையில் சென்னையில் வாழ்வது கடினம். யாரிடமும் உதவியும் கேட்க முடியாது. ஏனெனில் அவர்களும் ஏறக்குறைய எங்கள் நிலையில்தான் உள்ளனர். ஆனால் சொந்த ஊருக்கு சென்றால் கிராமங்களில் விசாலமான வீடு, தோட்டம், விவசாயம், பெட்டி கடைகளை வைத்து பிழைத்து கொள்ளலாம். குழந்தைகளையும் கிராம பள்ளிகளிலேயே சேர்த்து விடலாம்.

ஆனால் சொந்த ஊருக்கு சென்று வாழவும் முடியாமல், சென்னையில் சாகவும் முடியாமல் போலீசார் எங்களை தடுத்துக் கொண்டே இருக்கின்றனர். இனி சென்னையே வேண்டாம் என்ற நிலையில்தான் புறப்பட்டுச் செல்கிறோம். ஆனால், போலீசார் திடீரென அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்துவிட்டனர்.ஒரு பக்கம் கொரோனா பயம். ஒரு பக்கம் பசி பட்டினி. மற்றொரு பக்கம் வேலை. நாங்கள் என்ன செய்வது. அரசும் போதிய நிவாரணம் கொடுக்கவில்லை.  
இதுதொடர்பாக செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் கூறும்போது, போலீசார், தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மாவட்டத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை, ஓஎம்ஆர் மற்றும் இசிஆர் சாலைகளில் சோதனை பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் மீண்டும் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.மாவட்டம் முழுவதும் கடைகள்  மார்க்கெட் பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடாத வண்ணம் கண்காணிக்கப்பட உள்ளது. முககவசம் இன்றி பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு ₹100 அபராதம் விதிக்கப்படும் என்றார். எப்போது கடையை மூடச்சொல்வார்கள், திறக்கச் சொல்வார்கள் என்ற நிச்சயமற்ற நிலையில் சென்னையில் வாழ்வது கடினம்.


Tags : Chengalpattu ,Chennai ,panic ,Corona ,South , People flocking,Chennai,south , Corona panic, Police stationing , Chengalpattu
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 300 பேருக்கு கொரோனா உறுதி