×

சீன அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?: முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி!

டெல்லி: சீன துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவியது தொடர்பாக, பிரதமரிடம் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சீனாவின் அத்துமீறல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி எந்த தகவலையும் வழங்காமல் மவுனம் காப்பது முழு தேசத்தையும் கவலையடைய வைத்திருப்பதாக அவர் கூறினார்.  லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன படையினர் இடையே நடந்த மோதலில், தமிழக வீரர் உட்பட 20 இந்திய ராணுவத்தினர் பலியாயினர். இந்திய ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் சீன படையில் பலி மற்றும் படுகாயம் அடைந்தோர் சேர்த்து 43 பேர்  என கூறப்படுகிறது. 45 ஆண்டுக்குப் பிறகு இந்தியா - சீனா ராணுவம் இடையேயான மோதலில் உயிர்பலி ஏற்பட்டுள்ளதால் போர் மூளும் அபாயம் நிலவி வருகிறது. இந்நிலையில் சீன அத்துமீறல் குறித்து பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ப.சிதம்பரம், இதுபோன்று மவுனம் காக்கும் பிரதமரோ, குடியரசு தலைவரோ உலகில் வேறு எங்காவது இருக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, சீன துருப்புகள் இந்திய நிலப்பரப்பில் ஊடுருவி 7 வாரங்கள் கடந்து விட்டன. ஆனால் அதுபற்றி இந்திய பிரதமர் நரேந்திர மோடி இதுவரை வாய் திறந்து ஒரு வார்த்தை கூட ஏன் பேசவில்லை? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இந்திய படை வீரர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். எத்தனை வீரர்கள்? அவர்கள் பெயர்கள் என்ன? எந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள்? உள்ளிட்ட எந்த தகவலையும் அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்காதது ஏன்? எனவும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். சீன துருப்புகள் நடத்திய தாக்குதலில் நாட்டை காப்பதற்காக வீரர்கள் தனது உயிரை தியாகம் செய்திருப்பதாக தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பழனி உள்ளிட்ட வீரர்களுக்கு ப.சிதம்பரம் புகழ் அஞ்சலி செலுத்தினார். 


Tags : P. Chidambaram ,Chinese ,Modi , Chinese infringement, PM Modi, silence, pc Chidambaram, question!
× RELATED “இவர்களின் அமைதி ஆபத்தானது”: பிரதமர்...