×

ஓ.பி.எஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை 15 நாட்களுக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்...!

டெல்லி: ஓ.பி.எஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் மீது சபாநாயகர் தனபால் நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் 15 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளது. முதலமைச்சர் பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு பதவி ஏற்றதும், பிப். 18-ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வந்தார். அவர் மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும், எடப்பாடி பழனிசாமி அரசு தீர்மானத்தில் வெற்றி பெற்றது. அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என திமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மனுவை விசாரித்த நீதிமன்றம், சபாநாயகர் இந்த விவகாரத்தில் ஒரு இறுதி முடிவை எடுப்பார். அவருக்கு நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என கடந்த பிப்.4ம் தேதி வழக்கை முடித்து வைத்தது. இந்நிலையில், திமுக தரப்பில் கடந்த 6ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பி.எஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 3 மாதங்கள் கடந்துவிட்டது. சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், மணிப்பூர் மாநில வழக்கு போன்று, இந்த மனுவையும் நீதிமன்றம் தாமாக முன்வந்து அவசரமாக கருதி விசாரித்து ஒரு இறுதி உத்தரவை பிறப்பிக்கவேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக சபாநாயகர் தனபால் ஏன் முடிவு எடுக்காமல் இருக்கிறார்? என தலைமை நீதிபதி பாட்டே கேள்வி எழுப்பினார். தொடர்ந்து, 11 எம்எல்ஏக்கள் பதிலளிக்க நோட்டீஸ் அளித்துள்ளோம் என்று சபாநாயர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கின் விசாரணையை 15 நாட்களுக்கு ஒத்திவைத்தப்படுவதாக நீதிபதி அறிவித்துள்ளார். திமுக தரப்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளதால் சபாநாயகர் ஏதேனும் நடவடிக்கை எடுக்கும் வேளையில் மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.


Tags : Supreme Court ,OPS , Supreme Court adjourns hearing on 11 MLAs including OPS for 15 days
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...