×

கொரோனா பீதியிலும் தமிழகத்தின் கழுத்தை நெரிக்கிறது மத்திய அரசு அதிருப்தியின் உச்சத்தில் விவசாயிகள் குமுறல்

சேலம்: தமிழகத்தில் கொரோனா பீதியிலும் நீர், நிலம், மின்சாரம் சார்ந்த திட்டங்களுக்கு அச்சாரமிட்டு மத்திய அரசு கழுத்தை நெரிக்கிறது என்று விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை தலைநகரமான சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களும்  கொரோனா பீதியில் உறைந்துள்ளது. இதனால் வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வரும் 30ம்தேதிவரை, ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் தொழில்கள் அனைத்தும் ஸ்தம்பித்து நிலைகுலைந்து நிற்கிறது. இந்தச்சூழலில் மத்திய தமிழகத்தின் உயிர்நாடியான விவசாயத்திற்கு உலை வைக்கும் வகையில் மத்திய அரசு திட்டங்கள் உள்ளது. அதிலும் கொரோனா பீதிக்கு மத்தியில் தமிழகத்தின் நீர், நிலம், மின்சாரம்  போன்றவற்றை பறிப்பதற்கு அச்சாரமான திட்டங்கள், மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று குமுறுகின்றனர் விவசாயிகள் சங்க நிர்வாகிகள்.

இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு   நிர்வாகிகள் கூறியதாவது: அரை நூற்றாண்டாகக் காவிரி விவகாரத்தில் பலவற்றை இழந்து நின்ற தமிழகத்திற்கு,  நீண்ட சட்டப் போராட்டத்தின் முடிவில் கிடைத்தது தான் காவிரி மேலாண்மை ஆணையம்.  காவிரி மேலாண்மை ஆணையம் என்ற பெயரில் தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு உருவாக்கப்பட்டது.இறுதித் தீர்ப்பில் காவிரி ஆணையம் எப்படி இயங்க வேண்டும் என்பதை உச்ச நீதிமன்றம் வரையறுத்திருந்தது. இதற்கு மத்திய அரசோ, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளோ கட்டுப்பட மறுத்தால், ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுத் தீர்வு காணலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி காவிரி ஆணையத்தைத் தன்னாட்சியோடு இயங்கச் சொன்ன உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை உதாசீனப்படுத்தி, மத்திய ஜல்சக்தி துறையின் அதிகாரத்திற்குள் கொண்டு வந்திருப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல் என்றால் அது மிகையல்ல. மத்திய அரசின் அடுத்த அதிரடி, மின்சாரச் சட்டத்தில் கொண்டுவரப்படும் சில திருத்தங்கள். 2003ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட மின்சாரச் சட்டத்தில் பல திருத்தங்கள் செய்து, புதிய திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது மத்திய அரசு. ஏப்ரல் 17ம் தேதி இதற்கான வரைவுச் சட்டம் மாநில அரசுகளின் பார்வைக்கு அனுப்பப்பட்டது.  இந்தச் சட்டத்திருத்தம், பெருமுதலாளிகளுக்குச் சாதகமாகவே கொண்டுவரப்படுகிறது.

‘‘மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள், மின் உற்பத்திச் செலவுக்கு இணையாக மின்கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும். அரசு அளிக்கும் மானியங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது. அவை நேரடியாக நுகர்வோருக்குச் சென்றுவிடும்,’’ என்கிறது புதிய திருத்தச் சட்டம்.  இதனால் இனி, மின்சாரத்தை உற்பத்திசெய்யும் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் மானியமில்லாத முழு மின்கட்டணத்தையும் நுகர்வோர் கட்டிவிட வேண்டும் நிலை உருவாகியுள்ளது. பெரும் போராட்டத்தின் மூலம் தமிழக விவசாயிகளுக்கு கிடைத்த இலவச மின்சாரம் அறவே ரத்தாகும்.  இந்த சட்டதிருத்தங்களுக்கு ஆயத்தமாகி வரும்  நேரத்தில் தமிழக விவசாயிகள் கடுமையாக எதிர்த்து, பெரும் போராட்டம் நடத்தி  உச்சநீதிமன்றம் வரை சென்று தடையாணை  பெற்ற சேலம்-சென்னை 8வழிச்சாலை திட்டத்தையும் கையில் எடுத்திருக்கிறது மத்திய அரசு. சமீபத்தில் உச்சநீதிமன்றத்தில் இது குறித்து மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது மத்திய அரசு. அதில், ‘‘6மாதங்களாக 8வழிச்சாலை பணிகள் குறித்த மேல்முறையீட்டு மனு நிலுவையில் இருப்பதால் பணிகள் பாதியில் நிற்கிறது.

தேசிய நலன்சார்ந்த மிகப்பெரிய திட்டம் என்பதால் அதனை தடுக்க கூடாது,’’ என்று குறிப்பிட்டுள்ளது. கொரோனா பீதியில் விவசாயம் பாதித்து விழி பிதுங்கி தமிழக விவசாயிகள் நிற்கின்றனர். இப்படிப்பட்ட நிலையில் அவர்களின் நீராதாரத்திற்கு உலைவைக்கும் வகையில் காவிரி ஆணைய உரிமையை பறிக்கும் வகையில் ஜல்சக்தி துறையில் இணைப்பு, பல ஆண்டுகளாக விவசாயிகள் போராடி பெற்ற இலவச மின்சாரத்திற்கு உலைவைக்கும் சட்டதிருத்தம், லட்சக்கணக்கான மரங்களையும், ஆயிரக்ணக்கான ஏக்கர் விளைநிலங்களையும் அழிக்கும் 8வழிச்சாலை திட்டத்திற்கு மீண்டும்  தூசுதட்டியிருப்பது என்று, அனைத்தும் விவசாயிகளின் கழுத்தை  நெரிக்கும் படுபாதமாக மாறியிருப்பது மிகுந்த வேதனைக்குரியது. இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

பாகுபாடு காட்டியதே அச்சத்திற்கு காரணம்
‘‘காவிரிப் பிரச்னை என்பது தஞ்சாவூர் விவசாயிகளின் பிரச்னை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பிரச்னை. சென்னை தொடங்கி ராமநாதபுரம் வரையிலும், திருப்பூரிலிருந்து வேலூர் வரையிலும், ஒகேனக்கல் முதல் நாகப்பட்டினம் வரையிலும் தமிழகத்தில் கடைசியாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறையையும் சேர்த்து 31 மாவட்டங்கள் குடிநீருக்கும், விவசாயத்துக்கும் காவிரியைத்தான் நம்பியிருக்கிறது. தமிழகத்தின் 25 லட்சம் ஏக்கர் நிலங்களில் பாசனத்திற்கு காவிரித் தண்ணீரை விட்டால் வேறு வழியில்லை. ஏனைய மாநிலங்களுக்கிடையிலான நதி நீர்ப் பிரச்னைகளில் மத்திய அரசு இப்படிப் பாரபட்சத்துடன் நடந்துகொண்டதாகத் தெரியவில்லை. அதனால்தான், காவிரி மேலாண்மை ஆணையமானது, மத்திய நீர்வள அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டிருப்பது அச்சத்தையும், கவலையையும் அளிக்கிறது,’’ என்பது விவசாயிகளின் வேதனை.

மாநிலத்தின் அதிகாரம் முற்றிலும் பறிபோகும்
‘‘2003ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மின்சாரச் சட்டம், மாநில அரசுகளின் பல உரிமைகளைப் பறித்தது. குறிப்பாக, கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம், மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டு, மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத்திருத்தத்தின்படி, ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை மத்திய அரசே தேர்வுசெய்யும். இதனால், மாநில அரசுகளின் அதிகாரம் முற்றிலுமாகப் பறிக்கப்படும்,’’ என்பது சட்டவல்லுநர்கள் வெளியிட்டுள்ள  தகவல்.

நீதித்துறை சுதந்திரத்தில் தலையிடும் செயல் இது
சுற்றுச்சூழல், இயற்கை பாதிப்பு மற்றும் உயிரினங்கள், விலங்குகள் அழிக்கப்படுவதும் இன்றைய கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் சுற்றுப்புறச் சூழல் அமைச்சகத்தின் ஒப்புதல் பெறாமல் 8வழிச்சாலை திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறி, உச்சநீதிமன்றம் இந்த திட்டத்தை செயல்படுத்த தடைவிதித்தது. ஆனால் மத்திய அரசு, இதை கருத்தில் கொள்ளாமல் நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் தன்னாட்சியில் தலையிட்டு, மக்களுக்கு விரோதமான தீர்ப்புகளை பெற முயல்வது கண்டனத்திற்குரியது என்று கலங்குகின்றனர் 8வழிச்சாலையால் பாதிக்கப்படும் விவசாயிகள்.

Tags : government ,rebellion ,Tamil Nadu ,Peasants , Peasants' fury , central government, discontent
× RELATED தேவர் சமுதாய அரசாணை விவகாரத்தில்...