×

செங்கோட்டை அருகே ஊரடங்கை மீறி குண்டாறு அணைப்பகுதியில் குளிக்க வருவோரால் கொரோனா அபாயம்

* நிரந்தர தடை விதிக்க மக்கள் வலியுறுத்தல்

செங்கோட்டை: செங்கோட்டை அருகே குண்டாறு அணைப்பகுதியில் ஊரடங்கு தடையை மீறி குளிக்க வருவோரால் கொரோனா அபாயம் உள்ளதால் தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.  கொரோனோ வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு இம்மாதம் 30ம் தேதி வரை அமலில் உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாதளங்களும் மூடப்பட்டுள்ளன. இயற்கை எழில் கொஞ்சும் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், வெளியிடங்களில் இருந்து குளிக்க வந்த சுற்றுலா பயணிகளை திருப்பியனுப்பி வருகின்றனர்.   இருப்பினும் செங்கோட்டை அருகே குண்டாறு கண்ணுபுளிமெட்டு அணைப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட தனியார் அருவிகள் உள்ள நிலையில் இங்குள்ள குண்டாறு அணைப்பகுதியில் நுழைவு வாசலில்  போலீஸ் பாதுகாப்பு போடப்படாததால்  வெளியிடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் எவ்வித தடையும் இன்றி குளித்து சென்றனர்.

இவ்வாறு வெளியூர்களில் இருந்து இங்கு வந்து குளித்து செல்லும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோரால் கொரோனா பரவக்கூடும் என்ற அச்சம் உருவானது. இதையடுத்து இவ்வாறு வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்துசெல்வதை தடுக்கும் பொருட்டு நுழைவுவாயில் பகுதியில்  மரம், முள் உள்ளிட்டவற்றால் தற்காலிக தடுப்பு வேலி அமைத்துள்ளனர். அத்துடன் ஊரடங்கு தடையை மீறி அணைப்பகுதிக்கு  குளிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்க வேண்டும். போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை தென்காசி கலெக்டருக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

Tags : Corona ,Gundara Dam ,Sengottai ,curfew , Corona hazard , bathing , Gundara Dam, despite curfew, Senkot
× RELATED செங்கோட்டை அருகே மேக்கரை பகுதியில்...