×

நெல்லை டவுனில் அபாய நிலையில் கல்வித்துறை கட்டிடம்: இடித்து அகற்றப்படுமா?

நெல்லை: டவுனில் பாழடைந்து அபாய  நிலையில் உள்ள கல்வி அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றி விட்டு புதிதாக கட்ட வேண்டுமென கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். நெல்லை டவுன் ஆர்ச் அருகே உள்ள வளாகத்தில் கல்வித்துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அரசு மேல்நிலைப்பள்ளி, நெல்லை கல்வி மாவட்ட அலுவலகம், அரசு தேர்வுகள் துறை அலுவலகம் உள்ளிட்டவை இயங்குகின்றன. பரந்து விரிந்துள்ள இந்த வளாகத்தில் நெல்லை கல்வி மாவட்ட அலுவலகம், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் செயல்படுகிறது. இன்றைய கால கட்டிடத்தை ஒப்பிடுகையில் மிகவும் பலம் வாய்ந்த கட்டிடமாக இருந்தாலும் ஆண்டுகள் பல கடந்து விட்டதால் இந்த கட்டிடம் உறுதி தன்மையை இழந்து வருகிறது. கதவு, ஜன்னல்கள் உடைந்து காணப்படுகின்றன. ஆங்காங்கே கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனருகே அரசு பள்ளி உள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகள் இந்த கட்டிடத்தின் அருகே கடந்து செல்வதும் வழக்கம்.

எனவே ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டிடத்தை முழுமையாக இடித்து அகற்றி விட்டு புதியதாக கல்வித்துறை கட்டிடங்கள் கட்ட வேண்டுமென கல்வியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். மேலும் பல ஆண்டுகள் பயன்படுத்தப்படாமல் இந்த வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வித்துறைக்கு சொந்தமான பழைய வேன், ஜீப், கார் போன்ற வாகனங்கள் துருப்பிடித்து பயனற்று கிடக்கின்றன. இவற்றில் விஷ ஜந்துகள் குடியிருக்கின்றன. இந்த வாகனங்களையும் முறைப்படி ஏலம் விட்டு அப்புறப்படுத்துவது அவசியம். இந்த வளாகத்தில் கூட்டரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் பெரிய அளவில் 2 அடுக்கு கட்டிடம் கட்ட மாவட்ட கல்வித்துறை மூலம் திட்டமிடப்பட்டு கருத்துரு தயாரிக்கப்பட்டு இருந்தது. இத்திட்டத்தை மேலும் தீவிரப்படுத்தி பாழடைந்த கட்டிடங்கள் மற்றும் வாகனங்களை அகற்றி விட்டு சகல வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.

Tags : building ,paddy town ,town ,Paddy ,demolition , Academic building ,risk,paddy town, demolition?
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி