×

சமூக இடைவெளி இல்லாமல் கோயில்களில் அன்னதானம்: அருப்புக்கோட்டையில் கொரோனா தீயாய் பரவும் அபாயம்

அருப்புக்கோட்டை:  தமிழக அரசு 2011ம் ஆண்டு கோயில்களில் அன்னதானத்திட்டத்தை அறிமுகம் செய்தது. இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. கோயில் நிதியிலிருந்தும்,  அன்னதானத்திற்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலிருந்தும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அருப்புக்கோட்டையில் சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில், தாதன்குளம் விநாயகர் கோயில், மலையரசன் கோயில், ராமலிங்க சவுடாம்பிகை அம்மன் கோயில்களில் பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்படுகிறது.  கொரோனா தொற்று பரவலால் கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. ஆனால்,  அன்னதானத்திட்டம் மட்டும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு கோயில்களிலும் மதியம் 12 மணியில் இருந்து 12.30 மணிக்குள் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா  தொற்று பரவலுக்கு முன்பு கோயில்களில் உள்ள அன்னதான மண்டபத்தில் பக்தர்களை அமரவைத்து அன்னதானம் வழங்கினர்.  தற்போது கொரோனா தொற்று பரவலால் பக்தர்களை அமர வைக்காமல் பார்சலாக கொடுத்து வருகின்றனர். அன்னதானம் வாங்குவதற்காக இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட சொக்கலிங்கபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலிலும், தாதன்குளம் விநாயகர் கோயிலிலும் முதியவர்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நேற்று பலமணி நேரம் வரிசையில் காத்திருந்து அன்னதானம் வாங்கி சென்றனர்.

நேற்று தாதன்குளம் விநாயகர் கோயிலில் மதியம் 1.30 மணிக்கு மேலாகியும் அன்னதானம் வழங்கவில்லை. கொரோனா தொற்று சமூக பரவல் அதிகரித்து வரும் வேளையில் முதியவர்கள் சமூக இடைவெளியில் இல்லாமலும், முகக்கவசம் அணியாமலும் கோயிலுக்கு உணவுக்காக வெளியே கூட்டமாக காத்திருக்கின்றனர்.  முதியவர்களை குறிவைத்து கொரோனா தொற்று பரவி வரும் வேளையில் அருப்புக்கோட்டையில் உள்ள கோயில்களில் அன்னதானம் வாங்க முதியவர்கள் முட்டி மோதுகின்றனர். ஓட்டல்களில் உணவு அமர்ந்து சாப்பிடுவதற்கு தற்போது அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல் கோயில் அன்னதானம் மண்டபங்களில் அமர்ந்து சமூக இடைவெளியை கடைபிடித்து சாப்பிடுவதற்கு கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : Corona ,Aruppukkottai , Temples,without social, Corona fire,Aruppukkottai
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...