×

கீழடி 6ம் கட்ட அகழாய்வு..மீண்டும் மனித மண்டை ஓடு கண்டுபிடிப்பு!: தொல்லியல் ஆய்வாளர்கள் வேகம்!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் யூனியனை சேர்ந்த கீழடியில் தற்போது 6ம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி கீழடி மட்டுமின்றி அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. கீழடியில் ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகளில் அகழாய்வு பணிகள் நடைபெற்றன. தற்போது கீழடியில் நடைபெற்று வரும் 6ம் கட்ட அகழாய்வில் மீண்டும் மண்டை ஓடு கண்டறியப்பட்டுள்ளதால் தொல்லியல் ஆய்வாளர்களை வேகப்படுத்தியுள்ளது. கொந்தகை அகழாய்வில் தோண்டப்பட்ட 5 குழிகளில் இதுவரை 10 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. இதில் இரண்டு தாழிகளில் இருந்த எலும்புகள் எடுக்கப்பட்டு மரபணு சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. மூன்றாவது தாழியில் இருந்து சிறுசிறு எலும்பு துண்டுகள் மட்டும் வெளியே எடுத்துவந்த நிலையில் மண்டை ஓடு கண்டறியப்பட்டுள்ளது.

இதனை சேதம் ஏற்படாமல் எடுக்கும் பணியில் தொல்லியல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே கதிரேசன் என்பவர் நிலத்தை அகழாய்வு செய்த போது மண்டை ஓடு, எலும்புகள் மற்றும் உணவு கிண்ணம் போன்றவை எடுக்கப்பட்டுள்ளன. இந்த மண்டை ஓடு, பராமரிக்க முடியாத முதியவர்களை தாழியில் வைத்து புதைக்கப்பட்டதில் கிடைத்தது என்று தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது எடுக்கப்பட்டுள்ள மண்டை ஓடு வேறு இடத்தில் புதைத்தவர்களின் எலும்புகளை எடுத்து வந்து தாழியில் வைத்து புதைக்கப்பட்டது என்பதை கண்டறிந்துள்ளனர். தொடர்ந்து, நடைபெறும் 6ம் கட்ட அகழாய்வில் மேலும் பல பொருட்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.


Tags : Archaeologists , Beneath, excavators, human skulls, archaeologists
× RELATED கோயில்களில் சிலைகள் சரியாக உள்ளதா என...