×

அமைச்சர்களும், தலைவர்களும் முகக்கவசம் இல்லாமல் ஆசி கர்நாடக முன்னாள் அமைச்சரின் மகன் திருமண வரவேற்பில் அலைமோதிய கூட்டம்

பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் அமைச்சரும் தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏவுமான பி.டி.பரமேஷ்வர்நாயக் மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஊரடங்கு விதிமுறை காற்றில் பறக்கவிடப்பட்டது.  கர்நாடக மாநிலத்தில் 5வது கட்ட கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தாலும் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்காமல் இருக்க சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் 50 பேருக்கு ேமல் கலந்து கொள்ளக் கூடாது, நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் மாஸ்க் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது உள்பட பல வழிகாட்டுதல் விதிமுறைகள் அமலில் உள்ளது.

இந்நிலையில் கர்நாடக முன்னாள் அமைச்சரும் தற்போதைய காங்கிரஸ் எம்எல்ஏவுமான பி.டி.பரமேஷ்வர்நாயக் மகன் அவினாஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி பல்லாரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் கிராமத்தில் நேற்று நடந்தது.  இதில் மாநில மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் பி.ராமுலு, முன்னாள் முதல்வர் சித்தராமையா, முன்னாள் துணைமுதல்வர் பரமேஸ்வர், பல்லாரி தொகுதி பாஜ எம்பி தேவேந்திரப்பா உள்பட அனைத்து கட்சிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கில் கலந்துக் கொண்டனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் ராமுலு, முன்னாள் முதல்வர் சித்தராமையா, பரமேஸ்வர் உள்பட மக்கள் பிரதிநிதிகள், கட்சி தலைவர்கள் யாரும் மாஸ்க் அணியவில்லை, சமூக இடைவெளியும் பின்பற்றவில்லை. ஊரடங்கு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தும் தலைவர்களே, அதை மீறி செயல்படுவது என்ன நியாயம் என்று சாமானிய பாமரனும் கேள்வி எழுப்பினர். இதனிடையில் ஊரடங்கு விதிமுறை மீறி இருந்தால், பரமேஷ்வர்நாயக் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில மருத்துவ கல்வி அமைச்சர் சுதாகர் கூறியிருந்தார்.  அதை செயல்படுத்தும் வகையில் ஊரடங்கு விதிமுறை மீறி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதாக வந்த புகார் அடிப்படையில் பல்லாரி மாவட்ட நிர்வாகம் கொடுத்த புகார் அடிப்படையில் பரமேஷ்வர் நாயக் மீது ேபாலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags : Ministers ,leaders ,wedding reception ,minister ,Karnataka , Ministers, leaders, masquerades, former minister of Karnataka, son's wedding reception
× RELATED நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால்...