×

எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரம் ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் பதவி தப்புமா?: உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை

புதுடெல்லி: ஓ.பி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்கள் முதல்வர் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் உத்தரவு பிறப்பித்து மூன்று மாதமாகியும் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என திமுக தரப்பில்  தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017ம் ஆண்டு பதவி ஏற்றதும் பிப்ரவரி 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் மீது அதிருப்தியில் இருந்த தற்போதைய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மா.பா.பாண்டியராஜன், செம்மலை, சரவணன் உள்பட மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் அவரது அரசுக்கு எதிராக வாக்களித்தனர். இருப்பினும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் பெரும்பான்மை இருந்ததால் ஆட்சி பெரும்பான்மையை இழக்கவில்லை. இதையடுத்து நம்பிக்கை கோரும் தீர்மானமும் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் அதுகுறித்த எந்தவித நடவடிக்கைகளையும் அவர் எடுக்கவில்லை. இதையடுத்து திமுக தரப்பில் மீண்டும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில், சபாநாயகர் உத்தரவே இறுதியானது எனக்கூறி நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. இதைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தி.மு.க சட்டசபை கொறடா சக்கரபாணி தரப்பில் தொடரப்பட்ட  மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அடுத்த மூன்று மாதத்தில் இதுகுறித்து சபாநாயகர  முடிவெடுக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது. ஆனால் தற்போது வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில் திமுக தரப்பில் கடந்த வாரம் உச்சநீதிமன்றத்தில் புதிய இடைக்கால மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்; அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓபி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கில் உத்தரவு வந்து மூன்று மாதங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரை சபாநாயகர் எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை. அதனால் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தாமாக முன்வந்து மேற்கண்ட வழக்கை அவசர மனுவாக கருதி உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் .மேலும் இந்த விவகாரத்தில் சபாநாயகர் உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றமே தனது அதிகாரத்தை பயன்படுத்தி முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து பிறப்பிக்கப்படும் உத்தரவை பொறுத்தே எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்த விவகாரத்தில் ஓபி.எஸ் உட்பட 11 எம்.எல்.ஏக்களின் பதவி நீடிக்குமா என்பது தெரியவரும்.

புகார் அளித்த 6 பேருக்கு நோட்டீஸ்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் மீது, டிடிவி ஆதரவாளர்களாக இருந்த தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன் உள்ளிட்ட 6 பேர் சபாநாயகரிடம் பதவி பறிக்க வேண்டும் என்று புகார் அளித்தனர். இந்தநிலையில், அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயருக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்து இருந்தாலும், தற்போது நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். இதில் 11 எம்எல்ஏக்களும் அடங்குவார்கள்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் நாங்கள் தனித்தனியாக பிரிந்து இருந்தபோது செய்யப்பட்ட வழக்குகள் ஆகும். எனவே அந்த காரணங்கள் காலாவதி ஆகிவிட்டதாக கருதப்படும். அதனால் அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். அதற்கான அவசியம் தற்போது இல்லை என சபாநாயருக்கு முதல்வர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில், 11 எம்எல்ஏக்கள் பதவியை பறிக்க புகார் கொடுத்த 6 பேரும் 7 நாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ள நிலையில், புகார் அளித்தவர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Tags : OPS ,state government , Will 11 MLAs, including OPS, step down , voting against , state government?
× RELATED ஒரிஜினலை ரவுண்டு கட்டும் டூப்ளிக்கேட்டுகள்: ‘OPS’களின் அட்ராசிட்டி