×

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மரணம் எதிரொலி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிப்பு: 3 தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை

சென்னை:  திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் அண்மையில் மரணம் அடைந்தார். இதையொட்டி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏவாக இருந்தவர் ஜெ.அன்பழகன்.  இவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பலனின்று கடந்த 10ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து தமிழக சட்டமன்றத்தில் திமுகவின் பலம் 97 ஆக உள்ளது. ஜெ.அன்பழகன் எம்எல்ஏ மரணம் அடைந்ததை தொடர்ந்து, தமிழக சட்டமன்ற செயலாளர் சீனிவாசன் இந்த  தொகுதி காலியாக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவுக்கு நேற்று கடிதம் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, இந்த தகவல் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும், அதை தொடர்ந்து இந்த  தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக சத்யபிரதா சாஹு நேற்று அறிவித்தார். வழக்கமாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அந்த தொகுதியில் 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

அதன்படி சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதே நேரத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ளது. மேலும்  கொரோனா பாதிப்பு போன்ற காரணங்களால் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.  அதே நேரத்தில் திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏ கே.பி.பி.சாமி உடல் நலக்குறைவு காரணமாக பிப்ரவரி மாதம் 27ம் தேதி மரணம் அடைந்தார். அதைத்தொடர்ந்து பிப்ரவரி 28ம் தேதி  குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ எஸ்.காத்தவராயன் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். அப்போது சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கு 14 மாதங்கள் இருந்தது. இதனால், இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், இதுநாள் வரை இந்த 2 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த எந்தவித ஏற்பாடும் நடைபெறவில்லை. இந்த நிலையில் பொதுத்தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் தான் உள்ளது. கொரோனா பாதிப்பு வேறு. இதனால், திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 3 தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை.

Tags : Death ,DMK ,MLA ,J.Annabhagan ,constituency ,Cheppakkam-Tiruvallikeni ,J.Annabhajan , Echoing ,death , DMK MLA J.Annabhajan
× RELATED தேர்தலில் பாஜவுக்கு மக்கள் தோல்வியை...