×

அனுமதியின்றி மின்கம்பங்கள் அமைத்ததை கண்டித்து குளத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்: ஓட்டப்பிடாரம் அருகே பரபரப்பு

ஓட்டப்பிடாரம்: ஓட்டப்பிடாரம் அருகே குளத்தில் அரசின் அனுமதியின்றி நடப்பட்டுள்ள மின்கம்பங்களை அகற்ற வலியுறுத்தி குளத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியனுக்கு உட்பட்ட தலையால்நடந்தான்குளம் பகுதியில் தனியார் சூரிய ஒளி மின் உற்பத்தி நிறுவனம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து மின்சாரம் கொல்லங்கிணறு துணை மின் நிலையத்துக்கு கொண்டு வரப்படுகிறது. இதற்காக கீழக்கோட்டையில் உள்ள இந்திரக்குளம் என்ற பராக்கிரமபாண்டியன் குளத்தின் மைய பகுதியில் நிறுவனம் சார்பில் அரசின் அனுமதியின்றி சுமார் 200 இரும்பு மின்கம்பங்கள் அமைத்துள்ளனர்.  இதை அகற்ற வலியுறுத்தி குளத்தில் குடியேறி காத்திருப்பு போராட்டத்தில் நேற்று விவசாயிகள் ஈடுபட்டனர்.  தகவலறிந்து அங்குவந்த தாசில்தார்கள், அதிகாரிகள் சமரசம் பேசி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து தமிழ் விவசாயிகள் சங்க தலைவர்  ஓ.ஏ.நாராயணசாமி கூறுகையில், வருகிற 18ம் தேதிக்குள் மின்கம்பங்களை அகற்றி மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட சூரிய ஒளி நிறுவனம் மற்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விவசாயிகள், பொதுமக்களுடன் இணைந்து  ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை அரசிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும், என்றார்.


Tags : Pond farmers ,pond ,Parambaram ,Ottapidaram ,power plants , Farmers , pond waiting, electricity plants, without permission:
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...