×

உறுப்பினர்களை தவிர யாருக்கும் அனுமதியில்லை ஆந்திர பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று முதல் கூடுகிறது

* காணொலி காட்சியில் கவர்னர் உரையாற்றுகிறார்

திருமலை: ஆந்திர மாநில பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து சபாநாயகர் தம்மினேனி சீதாராம் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் சட்டப்பேரவை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. அப்போது சட்டப்பேரவை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் பேசியதாவது: கொரோனா வைரஸ்  பரவலை தடுக்கும் விதமாக  சிறப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவையில்  உள்ள ஒவ்வொரு இருக்கையும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.  

அனைத்து எம்எல்ஏ, எம்எல்சிக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட உள்ளது. உறுப்பினர்களை தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. இந்தாண்டின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் என்பதாலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையாகவும் முதல்முறையாக கவர்னர் பிஷ்வ பூஷன் ஹரிச்சந்திரன் காணொலி காட்சி மூலம் உரையாற்ற உள்ளார்.  ஆளுநர் உரைக்கு பின்னர், சட்டப்பேரவை  எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது  குறித்து தீர்மானிக்கப்படும் என்றார்.

கூட்டத்தொடர் முழுவதும் கருப்பு சட்டை- தெலுங்கு தேசம் முடிவு
ஐதராபாத்தில் இருந்து தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய தலைவர் சந்திரபாபு தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். அதில் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எவ்வாறு பங்கேற்பது, ஆளுங்கட்சியினரின் மக்கள் விரோத நடவடிக்கையை கண்டிப்பது, கட்சி தலைவர்கள் கைது, பொய் வழக்குகள் தொடர்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.  இதில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் முழுவதும் கருப்பு சட்டை அணிந்து செல்வது என முடிவு செய்யப்பட்டது.


Tags : Andhra Budget Session ,meeting ,The Budget Session ,AP , Members, AP, Budget session
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...